சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் வருகின்ற 24ஆம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநாடு பந்தலை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திராவிட இயக்கத்தினுடைய ஒரு விரிவாக்கத்தின் அடிப்படையில்தான் இளைஞர் அணி உருவாக்கப்பட்டது. கலைஞர் தொடங்கி வைத்த இளைஞர் அணி தாய் கழகத்துக்கு மிக வலுவானதாக உருவானது. அதற்கு காரணம் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தான். தாய் கழகம் மட்டுமே மாநாடு நடத்தி வந்த நிலையில் இளைஞரணி சார்பில் திருநெல்வேலியில் ஸ்டாலின் மாநாட்டினை நடத்தினார்.


தற்போது 2 வது இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இளைஞர் அணி செயலாளராக அமைச்சர் உதயநிதி உள்ளார். அவர் இளைஞரணி செயலாளராக வந்த பிறகு இன்றைய இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகளை நடத்தினார். 234 தொகுதிகளிலும் இதற்கான கூட்டங்களை நடத்தினார்.
 


தலைவருக்கு பின்னால் உதயநிதி:


மேலும், நீட் தேர்வு என்கிற கொடுமையான தேர்வினை இல்லாமல் ஆக்குவதற்காக நீட் விலக்கு கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்புவது போன்ற பணிகளை அமைச்சர் உதயநிதி ஒருங்கிணைத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள எல்லா இளைஞர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் தற்போது மாநாட்டினை நடத்த உள்ளார். இந்த மாநாடு நான் நினைத்ததை விட பிரம்மாண்டமாக உள்ளது.


மிக நேர்த்தியாக, திராவிட உணர்வுகளை தூண்டுகிற அளவிற்கு மாநாட்டுப் பந்தல் அமைந்துள்ளது. கடந்த 3 மாத காலமாக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கடுமையாக உழைத்து வருகிறார். அவருடைய ஆளுமையை பயன்படுத்தி செய்து வருகிறார். தமிழ்நாட்டின் தேவைகள் இன்னும் அதிகமாக உள்ளது. தமிழர்களுக்காக உருவாக்கபட்ட திமுக, தலைவருக்கு பின்னால் வழிநடத்தி செல்லக்கூடியவராக உதயநிதி கிடைத்திருக்கிறார். மாநாடு முழுமையாக வெற்றி பெறும்" என்று கூறினார்


. மழையால் சாலைகள் சேதமடைந்துள்ளது குறித்த கேள்விக்கு, "பருவ மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை விரைந்து செயல்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கு பாதிப்பில்லாமல் விரைவாக செய்து கொண்டிருக்கிறார்கள். நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்காக ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம். மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். நிதி வந்தவுடன் பணிகள் நடைபெறும் தெரிவித்தார்.



மாடர்ன் தியேட்டர்ஸ்


மாடர்ன் தியேட்டர்ஸ் பகுதியில் அரசின் சார்பில் ஏதோ செய்யப் போகிறோம் என சமூகவலைத்தளங்களில் தகவல் பரவுகிறது. உண்மை நிலை அதுவல்ல. நெடுஞ்சாலைத்துறை சார்பில் எல்லா இடங்களிலும் ஆக்கிரமிப்பு அகற்றி சாலை விரிவாக்கம் செய்து வருகிறோம். முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலைகள் அளவீடு செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு கூட்டம் நடத்தப்பட்டதில்லை.


விபத்துகளை குறைக்க அந்த கூட்டங்களை 28 மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. சாலை ஆக்கிரமிப்பால் விபத்து நிகழ்வதாக பல்வேறு தரப்பினரும் அந்த கூட்டத்தில் சொல்கிறார்கள். சட்டமன்றத்தில் ஏற்கனவே அறிவித்து இருக்கிறோம். அதன்படி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களை அளந்து பார்த்து கல் நடப்படுகிறது. அந்த அடிப்படையில் ஏற்காடு சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கல் நடப்பட்டுள்ளது. அதை மாடர்ன் தியேட்டர்ஸாக பார்க்கக் கூடாது.


பதில் சொல்ல முடியாது


ஏற்காடு சாலையாக மட்டுமே பார்க்க வேண்டும். கல் போட்டவுடன் கற்பனையாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களுக்கு அரசு பதில் சொல்ல முடியாது. அங்கு எந்தவித கட்டுமானம் செய்யவோ, சிலை வைக்கும் திட்டமோ இல்லை. நெடுஞ்சாலைத்துறை சொத்துக்களை அடையாளம் காணவே கல் போடப்பட்டுள்ளது. 


சென்னை பெருவெள்ளத்தில் எல்லா இடங்களிலும் மழை நீரை அகற்றுவதற்காக முழுமையாக பணியாற்றி உள்ளோம். எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்காக விமர்சனங்களை சொல்கிறார்கள். கிண்டி, பல்லாவரம், தாம்பரம் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் உடனடியாக பணிகள் மேற்கொண்டோம்.  சென்னையில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற இடங்களில் ஜேசிபி இயந்திரம் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு பால் உள்ளிட்ட பொருட்களை வழங்கினோம்.


எல்லா வேலைகளையும் செய்துள்ளோம். மக்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவர்களுடையை அரசியல் முகத்தை காண்பிப்பதற்காக பல்வேறு கருத்துக்களை சொல்லி வருகிறார்கள் என்றார்.