தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்க கூடிய  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை மட்டுமில்லாமல் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் பயன்பெறுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கூட செய்ய முடியாத பல்வேறு முக்கிய அறுவை சிகிக்களை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் அதிகளவு தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பலரும் விரைவாக குணமடைந்து வீடு திரும்பினர்.  ராஜாஜி மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டு வருகிறது.  இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்துசெல்கின்றனர்.




 

இந்நிலையில் கடந்த நவம்பர் 26ஆம் தேதி  மதுரையை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரசு மருத்துவமனை ரேடியாலஜி துறையில் ஸ்கேன் எடுக்க சென்றுள்ளார்.  அப்போது  சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணிடம் அங்கு பணியில் இருந்த மருத்துவர் சக்கரவர்த்தி பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஸ்கேன் அறைக்குள் இருந்த செவிலியரை வெளியே செல்ல கூறிய பின் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதனை தொடர்ந்து இளம்பெண் நடந்த சம்பவத்தை வெளியில் இருந்த தனது  தாயிடம் கூறியதையடுத்து இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேலிடம் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து புகார் குறித்து மருத்துவமனையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. முதலாவதாக ஸ்கேன் சென்டரில் பணிபுரியக்கூடிய செவிலியரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து முதற்கட்ட அறிக்கை  மருத்துவ கல்வி இயக்ககத்திற்கு அனுப்பபட்டது.



 


 

இதனையடுத்து புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவர் சக்கரவர்த்தி தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து மருத்துவகல்வி இயக்குனநரகம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் ஸ்கேன் சென்டரில் புகாருக்கு உள்ளான மருத்துவர் மீது இதே போன்று வேறு ஏதேனும் புகார் இருந்தாலும் விசாரணை குழுவிடம் தெரிவிக்கலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனையில் மருத்துவரே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.