திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் புனித செசிலியாள் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு செல்லாண்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாணவிகள் 2 பேர், திண்டுக்கல் அடுத்துள்ள சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த மாணவி, திண்டுக்கல் அடுத்துள்ள நந்தவனப்பட்டியைச் சேர்ந்த மாணவி இவர்கள் நான்கு பேருக்கும் 13 வயது ஆகிறது.
இவர்கள் நான்கு பேரும் பள்ளியில் 8ம் வகுப்பு டி பிரிவில் படித்து வருகின்றனர். இன்று 14.11.22 குழந்தைகள் தினம் என்பதால் மாணவிகள் அனைவரும் கலர் ஆடையில் வர வேண்டும் என பள்ளி நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. இதனையடுத்து பள்ளியில் கல்வி பயின்று வரும் அனைத்து மாணவிகளும் கலர் ஆடையில் பள்ளிக்கு வருகை தந்தனர்.
இதனையடுத்து காலை வழக்கம் போல் நான்கு மாணவிகளும் கலர் ஆடையில் பள்ளிக்கு வந்துள்ளனர். பள்ளி முடிந்து 4 மாணவிகளும் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பயந்து போன பெற்றோர்கள் பள்ளிக்கு வருகை தந்து ஆசிரியர்களிடம் விபரம் கேட்டனர். சம்பந்தப்பட்ட நான்கு மாணவிகளும் பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு திரும்பிச் சென்றதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பள்ளிக்கு வருகை தந்த காவல் துறையினர் பள்ளியில் உள்ள சிசிடி கேமராவை சோதனை செய்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்