திண்டுக்கல் அருகே நிலக்கோட்டையில் இரும்பு கடைக்குள் புகுந்து ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் 5 பேர் சரண் அடைந்தனர்.
திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்தவர் அழகர் (வயது 42). இவர் நிலக்கோட்டையில் தங்கி இருந்து, ஒரு இரும்பு கடையில் வேலை செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அவர் வழக்கம் போல் இரும்பு கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்குள் புகுந்த ஒரு கும்பல், அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டது.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திண்டுக்கல்லில் கடந்த 2020-ம் ஆண்டு சுள்ளான் ரமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் அழகர் 6-வது நபராக சேர்க்கப்பட்டு இருந்தார். இதனால் சுள்ளான் ரமேஷின் நண்பர்கள், அழகரை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
Mahalaya Amavasya: மகாளய அமாவாசை; சதுரகிரி செல்ல இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி!
இதை அறிந்த அழகர் குடும்பத்துடன் நிலக்கோட்டைக்கு வந்துவிட்டார். நிலக்கோட்டையில் அரசு மருத்துவமனை அருகே உள்ள இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். இதை எப்படியோ தெரிந்து கொண்ட கும்பல், நிலக்கோட்டைக்கு வந்து நோட்டமிட்டுள்ளனர். பின்னர் பட்டப்பகலில் அவரை பழிக்குப்பழியாக கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் கொலையாளிகளை தேடி வந்தனர்.இந்தநிலையில் அழகர் கொலை வழக்கு தொடர்பாக பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் (23), சர்புதீன் (19), கார்த்தி (20), மாணிக்கம் (20), பார்த்தசாரதி (20) ஆகியோர் திண்டுக்கல் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். இதையடுத்து 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க நிலக்கோட்டை போலீசார் முடிவு செய்துள்ளனர்.