Sivagangai: மழை வேண்டி மரியாயி கல்லறை கோயிலில் 33 ஆடுகள் வெட்டி கமகம கறிவிருந்து

இங்கு வந்து பிராத்தனை செய்யவர்களுக்கு நீண்ட நாள் தீராத நோய்களும், பிரிந்து போன உறவும், தொலைந்து போன செல்வங்களும், சுப காரியங்களும் கைகூடுவதாக நம்பிக்கை.

Continues below advertisement
காளையார் கோவிலில் மழை வேண்டி புனித மரியாயி கல்லறை கோயிலில்  கூட்டுப் பிரார்த்தனை மற்றும் அன்னதான விழாவில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே பருத்தி கண்மாயில் அமைந்துள்ளது புனித மரியாயி கல்லறை கோவில். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம். இங்கு வேண்டுதல் நிறைவேறியவர்களும் புதிய வேண்டுதல் வைப்பவர்களுக்கு இவ்விழாவில் கலந்து கொண்டு கிடா வெட்டி அன்னதானம் நடத்துவது வழக்கம்.
 
 

அதேபோல் இந்தாண்டு  மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது. அன்னதான நிகழ்ச்சிக்காக 33 ஆடுகளை கொண்டு நடைபெற்ற கறி விருந்தில் சுற்று வட்டார பகுதியில் இருந்து அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டனர்.  200 ஆண்டுகளுக்கு முன்னர் மரியாயி என்ற இளம் பெண் காளையார்கோயில் பகுதியில் தனது இறை அருளால் ஏராளமானவர்களின் நோய்களை தீர்த்ததாக கூறப்படுகிறது. அவர் இறந்த பின்னர் அவரது சேவையை போற்றும் விதமாக மருதுபாண்டி சகோதரர்கள் கல்லறையை கட்டி இடமும் வழங்கி சிறப்பு செய்தனர். 

 
இங்கு இப்பகுதி மக்கள் சிறு ஆலயம் கட்டி ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சிறப்பு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.  இங்கு வந்து பிராத்தனை செய்யவர்களுக்கு நீண்ட நாள் தீராத நோய்களும், பிரிந்து போன உறவும், தொலைந்து போன செல்வங்களும், சுப காரியங்களும் கைகூடுவதாக நம்பிக்கை உள்ளதால், பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏராளமானோர் மாரியாயி கல்லறை கோயிலுக்கு வருகை தந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.

 
மேலும் இதுகுறித்து மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் கூறுகையில், ”காளையார் கோவில் புனித மரியாயி கல்லறை கோவில் என் மனதிற்கு நெருக்கமானது. இதனால் ஆண்டுதோறும் புராட்டாசி திருவிழாவிற்கு குடும்பத்தோடு வந்துவிடுவோம். இந்தாண்டு கோயிலில் 33 ஆடுகள் வெட்டப்பட்டு அனைவருக்கும் கறி விருந்து அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். எனக்கு என் குடும்பத்துடன் கலந்துகொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது” என்று தெரிவித்தார்.
 
Continues below advertisement