ABP Southern Rising Summit 2023 LIVE: ”ஆளாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து அதிகாரத்தை செலுத்த பார்க்கிறது பாஜக” - அமைச்சர் உதயநிதி
ABP Southern Rising Summit 2023 LIVE Updates: ஏபிபி-யின் ”தெற்கின் எழுச்சி” எனும் தலைப்பிலான ”ABP Southern Rising Summit” கருத்தரங்கு, சென்னையில் இன்று நடைபெற உள்ளது
பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து அதிகாரத்தை செலுத்த பார்க்கிறது மத்திய அரசு என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
2024 நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக 400க்கு மேற்பட்ட இடங்களை பாஜக கைப்பற்றும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
I.N.D.I.A கூட்டணி மூன்று முறை சந்தித்து ஆலோசனை நடத்தியது. I.N.D.I.A கூட்டணி என்பது 5 மாநில தேர்தலை எதிர்கொள்வதற்கு இல்லை. 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் I.N.D.I.A கூட்டணிக்குள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. I.N.D.I.A கூட்டணி அமைக்கப்பட்டதற்கு நோக்கமே மத்தியில் கூட்டாட்சிக்கு எதிராகவும் பாசிச சிந்தனையுடனும் செயல்படும் பாஜகவை வீழ்த்துவதற்குத்தான் என்றார் கார்த்திக் சிதம்பரம் எம்.பி.
அடுத்த தேர்தலில் மோடியை மையப்படுத்தியே இருக்கும். தேர்தலில் ஒரு தரப்பு ஆதரவு, ஒரு தரப்பு எதிர்ப்பு மட்டுமே இருக்கும். இதில் நடுநிலை எதுவும் இல்லை என்றார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
இந்திய அரசியலில் எப்போதும் மூன்றாவது கட்சியின் எழுச்சி இருக்கும். அந்த மூன்றாவது கட்சி தான் பாரதிய ராஷ்டிர சமிதி. கேம் சேஞ்சர் எனும் பதத்தை பற்றி பேசுகையில், “2024 தேர்தலுக்குப் பிறகு அதிமுக வீழ்ச்சியடையக்கூடும் என்பதால் குதிரைபேரம் நடக்கும் சூழல் உருவாகலாம்” என பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்தவரும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா பேசியுள்ளார்.
தேர்தல் என்பது டென்னிஸ் விளையாட்டு போன்றது. ஒவ்வொரு சுற்றுக்கும் முடிவுகள் மாறும். வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மைக்கும் தான். ஆனால், அதை ஒருபோதும் பாஜக பின்பற்றியதே கிடையாது என்றார் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமையும். இந்த வெற்றி தமிழ்நாடு அரசியலில் எதிர்ரொலிக்கும் என்றார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
2024 நாடாளுமன்ற தேர்தலில் உள்ள வாய்ப்புகள், எதிர்க்கட்சிகளால் பாஜகவை வீழ்த்த முடியுமா என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், தெலங்கானா முதலமைச்சரின் மகள் கவிதா கல்வகுந்த்லா, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மற்றும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்று பேசி வருகின்றனர்.
”நான் எப்போதும் தைரியமாக இருப்பேன். நான் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதில் தெளிவாகி இருப்பேன். என்னிடம் தவறாக நடத்துக் கொண்டால் அடிக்க கூட தயங்கமாட்டேன். சென்னைக்கு குடியேறிய காலக்கட்டத்தில், எனது அம்மா மற்றும் உறவினரிடம் தவறாக நடந்துக் கொண்டவரை நான் துரத்தி சென்று அவரது முக்கை உடைத்தேன்" என்றார் தேசிய மகளிர் அணி உறுப்பினர் குஷ்பு
"20 வயதில் நான் ரொம்ப இளமையாக இருந்தேன். எனக்கு திருமணம் ஆகவில்லை. எந்த பொறுப்புகளும் இல்லை. என்னுடைய வேலையை மட்டும் பார்த்து கொண்டிருந்தேன். ஆனால் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நான் முற்றிலுமாக மாறிவிட்டேன். எனக்கு தேவையானதை நானே தேர்ந்தெடுத்து என்னை மாற்றி கொண்டுள்ளேன்” என்றார் நடிகை சுஹாசினி.
“இந்திய சினிமாவில் அரசியல் எவ்வளவு முக்கியமானது?” என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை சுஹாசினி, "இந்தியாவில் அரசியல் இல்லாமல் எந்தப் படமும் இல்லை. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் அரசியல் படம் எடுப்பது கடினம்” என்று சுஹாசினி கூறினார்.
35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்து பணியாற்றப் போகிறார்கள் என்று நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.
35 வருடங்களுக்கு முன் மணிரத்னம், ’பொன்னியின் செல்வன்' படத்தை எப்படி உருவாக்க விரும்பினார் என்பதை நினைவு கூர்ந்தார் நடிகை சுஹாசினி. நடிகை சுஹாசினி கூறுகையில், "பொன்னியின் செல்வம் படத்தை எடுக்க வேண்டாம் என்று நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன். நாங்கள் தயாரித்த சில வரலாற்றுப் படங்கள் தோல்வியடைந்த பிறகு, இந்த படத்தை எடுப்பது பலனளிக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நாங்கள் அதை உருவாக்குவதற்கு முன்பே மக்கள் அதை விரும்பினர்" என்றார்.
”தற்போது உள்ள சினிமாவில் சாதி ஒடுக்குமுறை பேசப்படுகிறது. ஆரம்ப காலத்தில் சாதி ஒடுக்குமுறையை தூரத்தில் இருந்து நான் பார்த்தேன். பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் சாதி ஒடுக்குமுறை குறித்து திரைப்படம் மூலம் பேசுகின்றனர். அந்த கால படங்களில் சாதி ஒடுக்குமுறை சார்ந்த படங்களை நினைத்து வருத்தப்படுகிறேன்” - சுஹாசினி
நடிகை சுஹாசினி தற்போது பேசி வருகிறார்.
கட்சி வேறுபாடுகளை கடந்து எனக்கு ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும். எடுத்த முடிவில் இருந்து அவர் எப்போதும் பின்வாங்க மாட்டார் என்றார் ஜோதிமணி எம்.பி.
ராகுல் காந்தி தலைமையில் நாங்கள் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் வேலை செய்கின்றோம். இது எங்களுக்கு பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் கொள்கையை புரிந்துகொள்ள உதவுகின்றது என மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கூறினார்.
பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டபோது இந்தியா முழுவதும் உள்ள மக்கள் ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என கருதுகின்றனர். இந்தியாவில் தற்போது ராகுல் காந்திதான் மிகப்பெரிய தலைவராக உள்ளார் என மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கூறினார்.
நான் மிக இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து விட்டேன். நான் அரசியலுக்கு வந்த போது எந்த கட்சியையும் நான் சார்ந்திருக்கவில்லை. எங்களது கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தலில் நான் போட்டியிட்டபோது எனது குடும்பம் அதனை ஏற்க மறுத்தது. குறிப்பாக எனது தாயார் வலிமையாக எதிர்த்தார் என்றார் ஜோதிமணி எம்.பி.
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தற்போது பேசி வருகிறார்.
மகாத்மா காந்தி எப்போதும் மாற்றத்தை விரும்பக்கூடியவர். அவர் எப்போதும் யதார்த்தத்தை அறிந்திருந்தார் என மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி பேசினார்.
தமிழ்நாட்டில் கால் பதிக்கப்போவதாக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்ததற்கு பதிலளித்த காங்கிரஸ் முன்னாள் மாநிலங்களவை எம்பி ராஜீவ் கௌடா, பாஜக என்ன புகைக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாஜக இல்லாத தென்னிந்தியாவை தான் நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம் என்று முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா தெரிவித்துள்ளார்.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இன்று இல்லை. தமிழ்நாட்டில் பெரும் வெற்றிடம் உள்ளது. பாஜக அதனை நிரப்பும். மாநிலத் தலைவர் அண்ணாமலை இளமையான, துடிப்பானவர். அவரைப் பெற்றுள்ளோம். நாங்கள் 2026இல் ஆட்சியமைப்போம். திமுக, அதிமுக தவிர்த்து, தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம் என்று சொல்ல யாருக்கும் துணிச்சல் இல்லை. பாஜகவுக்கு இந்த துணிச்சல் இருக்கிறது என்றார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.
கடைசி 4, 5 ஆண்டுகளில் பாஜக தமிழ்நாட்டில் அமைப்புரீதியாக வளர்ந்துள்ளது. எங்கள் பூத் கமிட்டிக்கள் வலிமையாக உள்ளன. நாங்கள் நன்றாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் என்றார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி
இந்தியாவில் பெரும்பாலான ஊடகங்களின் ஆசிரியராக இருப்பது பிரதமர் மோடிதான் - ஜான் பிரிட்டாஸ் எம்.பி
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக நிச்சயம் வளர்கிறது. தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என பலர் சொல்கிறார்கள். யார் யாரெல்லாம் இதை சொல்கிறார்கள்? திமுக, அதிமுக தவிர கடந்த 50, 60 ஆண்டுகளில் வேறு யாரும் தமிழ்நாட்டில் காலூன்றவில்லை. அவர்களைத் தவிர வேறுயாருமில்லை. ஆனால் கடந்த கடைசி 60 ஆண்டுகளில் காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் கட்சிகளைவிட தமிழ்நாட்டில் பாஜக நிச்சயமாக வளர்ந்துள்ளது என்று தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பேசியுள்ளார்.
மாநிலங்களின் இடையேயான இடைவெளி மிகவும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பீகாரை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது. ஒரே பொருளாதாரத் திட்டம் எங்கள் இருவருக்கும் எப்படி பொருந்தும்? இரு மாநிலங்களுக்கும் வேறு வேறு பிரச்னைகள் உள்ளன. எனவே வேறு வேறு தீர்வுகள் தேவைப்படுகின்றன என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ், தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி , முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா ஆகியோர் பேசி வருகின்றனர்.
உலகம் முழுவதும் ஜனநாயகம் பற்றிய கருத்து சுயமாக முடிவெடுப்பதை தான் குறிப்பிடுகிறது. மக்களுக்கு அருகில் அதிகாரத்தை நகர்த்த வேண்டும். மூன்று டிகிரி தள்ளி இருந்து அதிகாரத்தை செலுத்தக் கூடாது. மாநில அரசுக்கென்று ஒரு பங்கு உள்ளது. நான் தான் இந்த நாட்டின் தந்தை என்ற முறையில் வழிநடத்தக்கூடாது. நம் நாடு பன்முகத்தன்மை வாய்ந்தது என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
குஜராத் முதலமைச்சராக இருந்த வரை நரேந்திர மோடிதான் எல்லா காலத்திலும் சிறந்த கூட்டாட்சிவாதி. உள்ளாட்சி அமைப்புகளுக்கு பணம் சென்று மக்கள் பயன்பெறும் வகையில் அதிகாரப் பகிர்வு தேவை என்று அமைச்சர் பழனிவேல் தியாராஜன் பேசியுள்ளார்.
தென் இந்தியாவில் மதம் ஜனநாயகமாக உள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.
மதங்களை ஆயுதமாக வைத்து, மக்களை பிரிக்க நினைத்தால், அது தென் இந்தியாவில் பலிக்காது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.
ஜனநாயக நாட்டில் அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்க வேண்டும். பின்னர், நாம் ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.
தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போது பேசி வருகிறார். இந்தியாவுக்கு ஏன் கூட்டாட்சி தேவை? என்ற தலைப்பில் பேசி வருகிறார்.
குழந்தைப் பருவத்தைப் பற்றி இசைக்கலைஞர் மகேஷ் ராகவன் பேசுகையில், ”சிறுவயதில் இருந்தே நான் இசையில் ஆர்வாகமாக இருந்தேன். இசை தொடர்பான அனைத்தும் எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. எனது பெற்றோர் மிகவும் ஊக்கமளித்தனர்” என்று பேசியுள்ளார்.
இசைக் கலைஞர்கள் மகேஷ் ராகவ் மற்றும் நந்தினி ஆகியோர் இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டே பேசி வருகின்றனர்.
40 ஆண்டுகளாக இந்தியா பொருளாதாரம் கட்டுக்குள் இருந்தது. ஆனால், அதற்காக 5 ஆண்டுத் திட்டங்களைக் கொண்டு வந்த நேருவை நான் குற்றம் சொல்லவில்லை. இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் 1991ல் தான் கிடைத்தது. 1947 அல்ல என்று எழுத்தாளர் குர்சரண் தாஸ் பேசியுள்ளார்.
கல்வி என்பது கற்பது மட்டுமல்ல, கேள்வியை எழுப்புவதும் தான். இன்று இந்தியர்கள் 80% பேர் நல்ல கல்வியைப் பெறவில்லை. கல்வி என்பது வாடிக்கையாகக் கற்றுக்கொள்வது அல்ல. கல்வி கேள்வி கேட்பது என்றார் எழுத்தாளர் குர்சரண் தாஸ்.
வெளிநாட்டு ஊடகங்கள் நம் நாட்டைப் பற்றி தவறாக எழுதுகின்றன. நேரு நம் நாட்டிற்கு நிறைய நல்லது செய்தார். நம் நாட்டை ஒற்றுமையாக வைத்திருந்தார் என்றார் புகழ்பெற்ற எழுத்தாளர் குர்சரண் தாஸ்.
“நான் இயக்குநராக வேண்டும் என்று திட்டமிடவில்லை. ஆனால் சிறந்த இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உடன் பணியாற்றியதால் நான் சினிமாவின் மீது வேட்கை கொண்டேன். என் வேலையை மிகவும் விரும்பினேன். நான் கதைகளை சொல்வதை விரும்புவதையும் இத்தனை ஆண்டுகளில் தெரிந்துகொண்டேன். என் முதல் படத்தை எடுக்க எனக்கு 18 ஆண்டுகள் ஆனது” என நடிகை ரேவதி பேசியுள்ளார்.
எனது முதல் படத்தை இயக்க 18 ஆண்டுகள் ஆனது. நான் இயக்குனராக வேண்டும் என்று திட்டமிடவில்லை. ஆனால் அது நடந்தது என்று நடிகை ரேவதி தெரிவித்துள்ளார்.
நெட்ஃபிளிக்ஸ் வெளியான 'டூத் பாரி' சீரியஸ் ஒரு நடிகராக எனக்கு ஒரு சவாலாக இருந்தது என்றார் நடிகை ரேவதி.
"திரைப்படங்களில் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் மாறிவிட்டது. எனது குடும்பம் சினிமா துறையில் இல்லை. நான் இயக்குனர் பாரதிராஜாவால் சினிமா துறையில் அறிமுகப்படுத்தப்பட்டேன்" என்றார் நடிகை ரேவதி.
"மணிரத்னம் இயக்கிய 'மௌன ராகம்' படத்தில் யாரும் நடிக்க விரும்பவில்லை. ஆனால் மணிரத்னம் இந்த கதையை என்னிடம் கூறும்போது, இந்த படத்தை நீங்கள் எப்போது எடுத்தாலும் நான் கட்டாயம் நடிப்பதாக உறுதி அளித்தேன். அதில் எனது நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்தது என பலர் கூறினர். இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது” என்றார் நடிகை ரேவதி.
மணிரத்னத்தின் 1986ஆம் ஆண்டு வெளியான ‘மௌன ராகம்’ திரைப்படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது என்று நடிகை ரேவதி தெரிவித்துள்ளார்.
நடிகையும், இயக்குனருமான ரேவதி, திரைத்துறையில் தனது 40 ஆண்டுகால அனுபவத்தை பகிர்ந்து கொண்டு வருகிறார்.
நான் பிட்னஸ் ஃப்ரீக் (Fitness Freak) இல்லை. வாரத்தில் மூன்று நாட்கள் பிரியாணி சாப்பிடுகிறேன். பாகுபலி போன்ற படங்களை பார்க்கும்போது உடலை வலுவாக வைக்க தோன்றும். ஆனால் நான் அப்படி இல்லை" என்று நடிகர் ராணா டகுபதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உணர்வு என்பது ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை கொண்டது. நாட்டில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இதுதான் சரியான நேரம் என்றார் நடிகர் ராணா டகுபதி.
பள்ளிதான் என் பெரிய கனவுக்கான அடித்தளம். நான் பள்ளியில் படிப்பை கற்றுக் கொண்டதை விட அங்கு வாழ்க்கை குறித்து நிறைய கற்றுக் கொண்டேன் என்று நடிகர் ராணா டகுபதி தெரிவித்துள்ளார்.
சினிமா துறை தொடர்ந்து இயங்கும். ஏற்கனவே ஓடிடி தளங்கள் சினிமா துறையை மாற்றியுள்ளது என்ற நடிகர் ராணா டகுபதி தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்து, நடிகர் ராணா டகுபதி கூறுகையில், "அனைவரையும் ஏஐ தொழில்நுட்பம் பாதிக்கும். உலகை இயக்கும் அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் உள்ளது" என்று அவர் கூறினார்.
சிறுவயதில் இருந்தே திரைப்படங்களில் ஈர்க்கப்பட்டதால் விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையில் இருந்து எனது பணியை தொடங்கினேன். பிரபலமாக இருப்பது ஒரு வேலை. இருப்பினும், பிரபலமாக இருப்பதில் எந்த நன்மையும் இல்லை" என்று நடிகர் ராணா டகுபதி பேசி உள்ளார்.
நடிகர் ராணா டகுபதி திரைப்படங்களில் இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து பேசி வருகிறார்.
ஏ.ஆர் ரகுமான் தலைமுறை தலைமுறையாக இந்திய இசையின் முகத்தை மாற்றியுள்ளார். இந்திய இசையின் அடையாளமாக ஏ.ஆர். ரகுமான் உள்ளார். நான் உட்பட ஒவ்வொரு இந்திய இசைக்கலைஞரும் ஏதோ ஒரு வகையில் அவரால் ஈர்க்கப்பட்டவர்கள் தான்" என்று ரிக்கி கேஜ் கூறினார்.
”பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்தியா பெரிய அளவில் முன்னேறி வருகிறது. காலநிலை மாற்றம் குறித்து இந்தியா அதிக அக்கறையாக உள்ளது” என்றார் ரிக்கி கேஜ்
பாலிவுட் இசையில் ஏன் ஈடுபடவில்லை என்று கேட்டபோது, "பாலிவுட் சினிமா கலாச்சார தடைகளை உடைக்கவில்லை. பாலிவுட் சினிமா இசையின் தவறான அடையாளத்தை உருவாக்கியுள்ளது" என்று இசையமைப்பாளரும் கிராமி விருது பெற்றவருமான ரிக்கி கேஜ் தெரிவித்துள்ளார்.
இசை மிகவும் சக்தி வாய்ந்த மொழியாகும். உலகத்தை சிறந்த இடமாக மாற்ற இசையின் சக்தியை பயன்படுத்த வேண்டும் என்று ரிக்கி கேஜ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் கிராமி விருது பெற்றவருமான ரிக்கி கேஜ் தற்போது பேசி வருகிறார். ”இவ்வளவு பெரிய மேடையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மற்றும் இசையை உருவாக்குவது ஒரு அற்புதமான உணர்வு” என்றார் ரிக்கி கேஜ்.
அரசியலை மிஸ் பண்றேன். ஆனா ஆளுநர் பதவி மூலம் மக்களுக்கு உதவும் இடத்தில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
ஆளுநர்களை சந்திப்பதையே முதலமைச்சர்கள் தவிர்க்கிறார்கள் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.
எதிர்கட்சியாக இருக்கும்போது ஆளுநர் தேவைப்படுகிறார். ஆளுங்கட்சியாக இருக்கும்போது தேவைப்படுகிறாரா? - ஆளுநர் தமிழிசை
ஆளுநர்கள் பாலமாக இருப்பவர்கள் : விபத்துகளை தடுப்பவர்கள், அவர்களை தவறாக புரிந்துகொள்ள தேவையில்லை - ஆளுநர் தமிழிசை
ABP Southern Rising Summit 2023 LIVE : Tamilisai Soundararajan Speech : ஆளுநர்கள் பொறுப்பு மிக்கவர்கள். அவர்கள் எதிர்க்கப்படவேண்டியவர்கள் அல்ல. - தமிழிசை செளந்தரராஜன்
நாங்கள் மாற்றங்களாக நினைப்பது, சிலருக்கு அரசியல் நகர்வுகளாக தோன்றலாம். ஆளுநருக்கு இருக்கும் சிக்கல் இது - ஆளுநர் தமிழிசை
மக்களுக்கான ஆளுநராக செயல்பட்டு வருகிறேன். - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
மகப்பேறு மருத்துவராக, இரு மாநில (குழந்தைகளாக நினைத்து) பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் - தமிழிசை செளந்தரராஜன்
ஏபிபியின் தென்னிந்தியாவை கொண்டாடும் கருத்தரங்கில் ஏபிபி-யின் சி.இ.ஓ. அவினாஷ் பாண்டே தொடக்க உரை ஆற்றி வருகிறார்.
ஏபிபி நடத்தும் தென்னிந்தியாவை கொண்டாடும் ஏபிபியின் கருத்தரங்கு தொடங்கியது.
ஏபிபி மிகவும் பிரமாண்டமாக நடத்தும் ”ABP Southern Rising Summit 2023" நிகழ்ச்சியில்” தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவங்கி நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஏபிபி நெட்வொர்க்கின் ”ABP Southern Rising Summit 2023" நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளும் அரசியல்வாதிகளும் தங்களுடைய சினிமா, அரசியலில் பெண்களின் பங்கு மற்றும் வரவிருக்கும் 2024 மக்களவை பொதுத் தேர்தல் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
ஏபிபி மிகவும் பிரமாண்டமாக நடத்தவுள்ள ”ABP Southern Rising Summit 2023" நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை மற்றும் தமிழ்நாடு இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
Background
ABP's Southern Rising Summit: புதிய இந்தியா தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவிக்கும் விதமாக, பல்துறை பிரமுகர்கள் பங்கேற்கும் ஏபிபி சார்பிலான “தெற்கின் எழுச்சி” எனும் தலைப்பிலான கருத்தரங்கு சென்னயில் இன்று நடைபெற உள்ளது.
முன்னுதாரணமாக உள்ள தென்னிந்தியா:
இந்தியாவின் தென் மாநிலங்கள் வளர்ச்சி, நிர்வாகம், கல்வியறிவு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் சிறந்த முன்மாதிரியாக உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடாகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் நிலவும், விதிவிலக்கான முன்னேற்றம், கலாச்சார செழுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை கொண்டாடுவதற்கும் ஆராய்வதற்கும், ஏபிபி நெட்வொர்க் 'தி சதர்ன் ரைசிங் சம்மிட் 2023' என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்வில் வணிகம், அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் அறிவியல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கும், பிரமுகர்களை ஒரே மேடையில் ஏற்றி சுவாரஸ்யமான விவாதத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஐந்து மாநிலங்களின் வளர்ச்சியை ஏற்றுக்கொண்டு, தென்னிந்தியப் பயணத்தின் சாராம்சங்களை வரையறுக்கும் தொலைநோக்கு சிந்தனைகள் மற்றும் ஆளுமைகளைக் கொண்டாடும் வகையில் ஏபிபி நெட்வொர்க் இந்த ஒரு நாளை அர்ப்பணித்துள்ளது.
”ABP Southern Rising Summit”
”புதிய இந்தியா” தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவிக்கும் விதமாக, பல்துறை பிரமுகர்கள் பங்கேற்கும் ஏபிபி சார்பிலான “தெற்கின் எழுச்சி” என்ற பொருள்படும் ”ABP Southern Rising Summit” என்ற தலைப்பிலான கருத்தரங்கு இன்று நடைபெற உள்ளது. இதில் அரசியல், தொழில்துறை, சினிமா, வணிகம், விளையாட்டு, அறிவியல் மற்றும் இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரமுகர்களும் பங்கேற்று, அரசியலில் பெண்களின் பங்கு, பன்முகத்தன்மை மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக கருத்துகளை தெரிவித்து விவாதிக்க உள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டலில் நடைபெறும் இந்த கருத்தரங்கு, news.abplive.com , abpnadu.com மற்றும் abpdesam.com ஆகிய இணையதளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.
அரசியல் சலசலப்புக்கு மத்தியில் கருத்தரங்கு:
தென்னிந்திய அரசியலில் நிலவும் பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில், இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது. பாஜக உடனான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது, சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி பேசிய கருத்து சர்சையானது மற்றும் தெலங்கானா சட்டமன்ற தேர்தல் போன்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு மத்தியில் தென்னிந்தியாவின் எழுச்சி தொடர்பான இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது. இதனால், அங்கு பல சுவாரஸ்யமான கருத்துகள் பகிரப்படுவதோடு, விவாதங்களும் நடைபெறும் சூழல் நிலவுகிறது.
ஆளுநர் தமிழிசை டூ அண்ணாமலை:
- தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநரான தமிழிசை சௌவுந்தரராஜன், குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, ”ஆளுநரின் பங்கை மறுவரையறை செய்வது ” என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்
- சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் கிராமி விருது பெற்றவருமான ரிக்கி கேஜ், சர்வதேச அரங்கில் இந்தியாவின் பங்கு குறித்து தனது கருத்துகளைப் பகிர உள்ளார்
- நடிகர் ராணா டகுபதி திரைப்படங்களில் இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து பேச உள்ளார்.
- நடிகையும், இயக்குனருமான ரேவதி திரைத்துறையில் தனது 40 ஆண்டுகால அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்
- புகழ்பெற்ற எழுத்தாளர் குர்சரண் தாஸ், இசைக்கலைஞர்கள் மகேஷ் ராகவன் மற்றும் நந்தினி சங்கர் ஆகியோர் சமகால பிரச்சினைகள் குறித்து பேசுவார்கள்
- ”தமிழ்நாடு மாடலில் இருந்து இந்தியா என்ன கற்கலாம்?” என்ற தலைப்பில் அமைச்சர் உதயநிதி பேச உள்ளார்
- இந்தியாவுக்கு ஏன் கூட்டாட்சி தேவை, அரசியலில் பெண்களின் பங்கு போன்ற பல்வேறு தலைப்புகளிலும் விவாதங்கள் நடைபெற உள்ளன
- இதில் தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ், தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சென்னிமலை, நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ சுந்தர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்
- நிகழ்ச்சியின் நிறைவாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் உள்ள வாய்ப்புகள், எதிர்க்கட்சிகளால் பாஜகவை வீழ்த்த முடியுமா என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது. இதில், பிஆர்எஸ் எம்எல்சி மற்றும் தெலங்கானா முதலமைச்சரின் மகள் கவிதா கல்வகுந்த்லா, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மற்றும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்க உள்ளனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -