மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


புகழ்பெற்ற சதுரகிரி மலை:


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி மலைக்கோயில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கோயிலில் மகாலிங்கம், சுந்தரமூர்த்தி லிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம், காட்டு லிங்கம் என ஐந்து கோயில்கள் உள்ளது. அமாவாசை, சிவராத்திரி, பௌர்ணமி ஆகிய தினங்களில் இந்த கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம். 


இப்படியான நிலையில் இந்த சிறப்பு தினங்களில் 4 நாட்கள் மட்டுமே வனத்துறையால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இங்கு அகஸ்தியர் உள்ளிட்ட 18 சித்தர்கள் வாழ்ந்ததாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இதனிடையே அக்டோபர் 14 ஆம் தேதி மகாளாய அமாவாசை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு  இன்று (அக்டோபர் 12) முதல் 15 ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 


யாருக்கெல்லாம் அனுமதி?


10 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மலையேற அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மலையேறும் பக்தர்கள் அங்கு செல்லும் நீரோடைகளில் குளிக்கக்கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்கக்கூடாது என ஏராளமான கட்டுப்பாடுகளை வனத்துறை பக்தர்களுக்கு விதித்துள்ளது. 


அதேசமயம் மலையேறும் நாட்களில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும். அமாவாசை தினங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படும் மகாளய அமாவாசைக்கு பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். சதுரகிரி மலைக்கு அமாவாசை நாட்களில் மதுரை, விருதுநகர், திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க: ABP Southern Rising Summit: தென்னிந்தியாவை கொண்டாடும் ”ABP Southern Rising Summit” - ஆளுநர் தமிழிசை, உதயநிதி, அண்ணாமலை பங்கேற்பு