ராணுவ வீரர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி ஈரோட்டைச் சார்ந்த நிறுவனம் மீது மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

 

ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு இயங்கும் UNIQUE EXPORTS என்கின்ற தனியார் நிறுவனம் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருக்கக்கூடிய பல்வேறு ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களிடம் 1 லட்சம் போட்டால் மாதம் இரண்டு தவணையாக மாதம் ரூ.9ஆயிரம் வீதம் 10 மாதத்தில் ரூ.1லட்சத்தி 80ஆயிரம் கொடுப்பதாகவும், 5 லட்சம் செலுத்தினால் மாதம் ஒரு தவணையாக 75ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதத்தில் 7 லட்சத்தி 50 ஆயிரம் கொடுப்பதாகவும், 5 லட்சம் செலுத்தினால் ஒரே தவணையாக 18 மாதத்தில் 15 லட்சம் கொடுப்பதாகவும், 25 லட்சம் செலுத்தினால் 5 வருடத்திற்கு வருடத்தில் நான்கு தவணையாக 5 வருடத்திற்கு 83 லட்சம் ரூபாய் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியதால் UNIQUE EXPORTS வங்கிக் கணக்கில் தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த ராணுவ வீரர்கள் பணத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது.

 


 

பணம் செலுத்தி நிதி நிறுவனம் கூறியது போல் 2 மாதம் மட்டுமே முறையாக பணம் வந்துள்ளதாகவும் பின்பு இரண்டு வருடங்களாகியும் இன்னும் வராமல் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் தங்களது குடும்பத்துடன் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இழந்த பணத்தை மீண்டும் பெற்று தரும்படியும் மோசடி செய்த நிறுவனத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் மனு அளித்துள்ளனர். 



 

ராணுவத்தில் பணிபுரிவதனால் ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே தான் சொந்த ஊருக்கு வந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் நாட்டு நடப்பு என்ன என்பது குறித்த விவரம் அறியாத காரணத்தினாலும் கூடுதலாக பணம் கொடுக்கப்படும் என்கின்ற ஆசை வார்த்தை கூறியதாலும் ஏமாந்து போய் பணத்தை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் பேட்டி அளித்துள்ளனர்.