மதுரை மாவட்டம் மேலூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 1,500 மூத்த திமுக உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்கினார்.

அன்பும், வீரமும்:


விழாவில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். முன்னதாக நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது....” மதுரை மக்கள் அன்புக்கும், வீரத்துக்கும் பெயர் போனவர்கள். மதுரையில் தான் திமுகவின் இளைஞரணி தொடங்கப்பட்டது. திமுக இளைஞரணி 2 ஆம் மாநாடு மதுரையில் நடத்த வேண்டும் என அமைச்சர் மூர்த்தி கோரிக்கை விடுத்தார். ஆனால் முதல்வர் சேலத்தில் இளைஞரணி மாநாட்டை நடத்த உத்தரவிட்டார். உண்மையான பாசத்துடன் அண்ணன் என அமைச்சர் மூர்த்தியை அழைக்கிறேன். எனக்கு உடன் பிறந்த அண்ணன் இருந்தால் என்னை எப்படி கவனித்து கொள்வாரோ, அதை போல அமைச்சர் மூர்த்தி என்னை கவனித்து கொள்கிறார்.



 

மக்கள் ஏமாற்றம்:


 

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் ஆடல், பாடல் நடைபெற்றது. ஒரு மாநாடு எப்படி நடத்த கூடாது என்பதற்கு அதிமுக மாநாடு உதாரணம். ஒரு மாநாடு எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு திமுக இளைஞரணி மாநாடு முன்னுதாரணமாக அமைய உள்ளது.  நீட் தேர்வு ரத்து குறித்த ரகசியத்தை என்னிடம் கேளுங்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுள்ளார்.

 

எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது வரும் எனும் ரகசியத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுவாரா? நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 1 கோடி கையெழுத்து பெறும் நிகழ்ச்சியை ஒரு வாரத்தில் தொடங்க உள்ளோம். திமுகவின் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று கையெழுத்து போடுவாரா? அதிமுக - பாஜக கட்சிகள் கூட்டணி குறித்து மாறி மாறி பேசி கொள்வது அவர்களுடைய உள்கட்சி பிரச்சினை. தற்போது பாஜக - அதிமுக கூட்டணி பற்றி அதிமுக மூத்த நிர்வாகிகள் யாரும் பேசவில்லை மாறாக தேர்தல் நேரத்தில் முடிவெடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். 



 

சனாதனம்:



சமாதானம் மாநாட்டில் நான் சனாதனம் குறித்து பேசிய கருத்து திரித்து வெளியிட்டப்பட்டு உள்ளது. தற்போது சாமியார்கள் எனது தலைக்கு 10 கோடி, 50 கோடி என விலை வைக்கின்றனர். நான் கலைஞர் வழியில் இருந்து வந்தவன். திமுககாரன் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். சனாதானத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம் தான் திமுக. சனாதனத்தை ஒழிக்கும் வரை நாம் போராட வேண்டும். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில், தாழ்த்தப்பட்ட சமுதாயம் மற்றும் விதவை என்பதால்  குடியரசு தலைவர் திரௌபதி மூர்மூவை  அழைக்கவில்லை.

 

பா.ஜ.க. பாம்பு, அ.தி.மு.க. குப்பை:


 

இதுதான் சனாதானம் இதைத்தான் நாம் ஒழிக்க வேண்டும்.  2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவினர் கடுமையான உழைக்க வேண்டும்.  பிரதமர் மோடி எங்கே சென்றாலும் என்னை பற்றியும், முதல்வர் குறித்தும் பேசி வருகிறார். மோடி ஒன்பதரை ஆண்டுகளில் என்னத்தை கிழித்து உள்ளார் என தெரியவில்லை. சாலை, காப்பீடு என அனைத்திலும் பாஜக அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற திமுகவினர் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.  தமிழகத்தில் இருந்து பாஜக எனும் பாம்பை  ஒழிக்க வேண்டும் என்றால், அதிமுக எனும் குப்பையை அகற்ற வேண்டும் என குட்டி கதை மூலம் கூறினார். இதனைத்தொடர்ந்து திமுக மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பொற்கிழியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.