பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். அவ்வாறு பழனிக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோயில் உண்டியலில் செலுத்துகின்றனர்.
இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோயில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதன்பிறகு நேற்று பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதற்கு பழனி முருகன் கோயில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் அலுவலர்கள், பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். நேற்று நடந்த உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 89 லட்சத்து 69 ஆயிரத்து 700 வருவாயாக கிடைத்தது. மேலும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 2042 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கப் பொருட்கள் 883 கிராம், வெள்ளி 13,997 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 2-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்