நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே வனப் பகுதியில் தாயை பிரிந்த 2 வார ஆண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு மீண்டும் தாயுடன் சேர்த்து வைத்தனர்.


நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியானது அதிக வனப்பரப்பை கொண்டுள்ள பகுதியாக உள்ளது. இந்த வனப் பகுதியில் யானைகள், காட்டெருமைகள், புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது யானைகள் இந்த வனப்பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று க்ளாண்ட் ராக் வனப்பகுதியை ஒட்டி  வாழக்கூடிய பழங்குடியின மக்கள் காப்பி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வதற்காக வந்துள்ளனர். அப்போது இரண்டு வாரங்களே ஆன யானை குட்டி ஒன்று நடக்க முடியாமல் படுத்திருப்பதை தோட்டத் தொழிலாளர்கள் பார்த்துள்ளனர். இது குறித்து உடனடியாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் யானைக்குட்டியை மீட்டனர்.




குட்டி யானை மிகவும் சோர்வு அடைந்திருப்பதை கண்ட வனத்துறையினர் அந்த குட்டி யானைக்கு தண்ணீர் மற்றும் பால் கொடுத்தனர். அதனை குட்டி யானை குடித்தது. மேலும் ஓடையிலும் தண்ணீர் குடித்தது. பின்பு குட்டி யானை எழுந்தவுடன் அதனுடைய தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டனர். வனப்பகுதி முழுவதும் குழுக்கள் அமைத்து அந்த குட்டி யானையின் தாயினை தேடும் பணியில் ஈடுபட்டனர்.



2 மணி நேர தேடுதலுக்கு பிறகு குட்டி யானையின் தாயினை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து குட்டி யானையை தாய் யானை இருக்கும் பகுதிக்கு வனத்துறையினர் அழைத்துச் சென்றனர். பின்னர் தாய் யானைக்கு அருகில் சென்ற நிலையில், சற்று தொலைவில் குட்டி யானையை வனத்துறையினர் விடுவிடுத்தனர். குட்டி யானையின் பிளிரும் சத்தம் கேட்டு வனப் பகுதியில் இருந்து வந்த தாய் யானை, இன்னொரு பெண் யானை உடன் வந்தது. பின்னர் குட்டி யானையை சேர்த்துக் கொண்டு இரண்டு யானைகளும் வனப்பகுதிக்குள் சென்றது. 




குட்டி யானை தாய் யானையுடன் சேர்ந்ததும், தும்பிக்கையை தூக்கி தாய் யானை பிளிறிய காட்சி, வனத்துறையினருக்கு நன்றி சொல்வது போல இருந்தது. குட்டி யானையை தனது கால்களுக்கு இடையே அரவணத்து நடந்தபடி தாய் யானை வனப்பகுதிக்கு செல்லும் போது, தும்பிக்கையை உயர்த்திக் காட்டிய நிலையில் ஒரு வனப்பணியாளர் யானைகளுக்கு கை அசைத்து வழியனுப்பியுள்ளார். வனத்துறையினர் பதிவு செய்த இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த காட்சிகள் வனத்துறையினர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. குட்டி யானை தாய் யானையுடன் வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், வனத்துறையினர் தாயுடன் இருக்கும் குட்டி யானை குழுக்கள்  அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண