பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கடந்த 2006 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு விசயங்களுக்கு குரல் கொடுக்கும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சிறுபான்மையினர் பிரிவில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு, இஸ்லாமியர் ஒடுக்குமுறை என இஸ்லாமியர்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு முன் நின்று வருகின்றனர்.  இந்த அமைப்பை தடைசெய்ய வேண்டும் என வேறு சில அமைப்புகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிவகங்கை இளையான்குடி பகுதியில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ என்று சொல்லக்கூடிய தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்திய பரபரப்பை ஏற்படுத்தியது.






தற்போது பாப்புலர் ப்ரண்ட ஆப் இந்தியா அமைப்பின் மூலமாக குழுக்களை உருவாக்கி பல்வேறு பயிற்சிகளை அளித்துவருவதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டத்தில் உள்ள  பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில்  தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.



அதன்படி மதுரையில் நெல்பேட்டை  பகுதியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர்  யூசுப் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பிஐ கட்சியினர. மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.





இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இதேபோன்று மதுரை மாநகர் பகுதியில் வில்லாபுரம், கோமதிபுரம் , கோரிப்பாளையம், குலமங்கலம் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. சோதனை நடைபெறுவதையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 4 மணிக்கு தொடங்கிய நிலையில் நெல்பேட்டை, கோமதிபுரம், வில்லாபுரம் பகுதிகளில் 7 மணிக்கு நிறைவடைந்துள்ளது.