உலகின் பாரம்பரியமிக்க டெஸ்ட் தொடர்களில் ஒன்று ஆஷஸ் டெஸ்ட் தொடர். ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த வரவேற்பை பெற்றது.


இந்த நிலையில், 2022-23ம் ஆண்டிற்கான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான போட்டிகள் மற்றும் இடங்கள் உட்பட முழு அட்டவணையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.






லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் முதல் வாரத்தில் அயர்லாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணி மோதுகிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியுடனான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் எட்ஜ்பாஸ்டனில் ஜூன் 16 ம் தேதி தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் ஜூலை 27-ம் தேதி ஓவலில் தொடங்குகிறது. 


ஆஷஸ் அட்டவணை 2023



  • 1வது டெஸ்ட் - ஜூன் 16 முதல் 20 வரை - எட்ஜ்பாஸ்டன்

  • 2வது டெஸ்ட் - ஜூன் 28 முதல் ஜூலை 2 வரை - லார்ட்ஸ்

  • 3வது டெஸ்ட் - ஜூலை 6 முதல் 10 வரை - ஹெடிங்லி

  • 4வது டெஸ்ட் - ஜூலை 19 முதல் 23 வரை - ஓல்ட் டிராஃபோர்ட்

  • 5வது டெஸ்ட் - ஜூலை 27 முதல் 31 வரை - ஓவல்


இந்த ஆஷஸ் தொடருக்கு பிறகான இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்கு எதிரால 4 ஒருநாள் மற்றும் 4 டி20ஐ தொடரில் விளையாட இருக்கிறது. மேலும், இந்த தொடர் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 15 வரை நடைபெறவுள்ளது. தொடர்ந்து அயர்லாந்திற்கு எதிராக செப்டம்பர் 20 மற்றும் 26 ம் தேதிகளில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. 


அதேபோல், அடுத்த ஜூன் மாதத்தில் இங்கிலாந்து மகளிர் அணியும், ஆஸ்திரேலியா மகளிர் அணியும் மோதி கொள்ளும் ஆஷஸ் தொடர் நடைபெற இருக்கிறது. 


இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைமை செயல் அதிகாரி கிளேர் கானர் தெரிவிக்கையில், “2023 ஆம் ஆண்டில் இரண்டு ஆஷஸ் தொடர்களை நடத்துவதில் நாங்கள் முற்றிலும் மகிழ்ச்சியடைகிறோம், அத்துடன் அயர்லாந்து ஆண்கள், நியூசிலாந்து ஆண்கள் மற்றும் இலங்கை பெண்கள் அணியுடன் இங்கிலாந்து விளையாட உள்ளது. இங்கிலாந்து பெண்கள் மற்றும் இங்கிலாந்து ஆண்களுக்கு அடுத்த கோடை காலம் மிகப்பெரியதாக இருக்கும். ஆஷஸ் தொடரை விட ஆங்கில விளையாட்டில் சிறப்பான சில நிகழ்வுகள் உள்ளன, மேலும் ஹீதர், பென் மற்றும் அவர்களது அணிகள் ஆஷஸை மீண்டும் பெறுவதற்கான சவாலால் உற்சாகமாகவும் உந்துதல் பெறுவார்கள் என்பதை நான் அறிவேன். 


முதன்முறையாக எங்கள் இங்கிலாந்து ஆண்கள் மற்றும் இங்கிலாந்து பெண்கள் போட்டிகளை அருகருகே நாங்கள் அறிவித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரே நேரத்தில் இரண்டு ஆஷஸ் தொடர்கள் ஜூன் மற்றும் ஜூலை இந்த நாட்டில் கிரிக்கெட்டுக்கு மிகவும் சிறப்பான மாதங்களாக இருக்கும்” என்று தெரிவித்தார்.