மத்திய வேளாண் துறை முதன்மைச் செயலாளர்  மதுரை , திருச்சி உள்ளிட்ட 6  மாவட்ட ஆட்சியர்கள்  பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. 2017-முதல் 2023  ஆகிய ஆண்டுகள் நிலுவைத்தொகையை உரிய  வட்டியுடன் வழங்க வேண்டும்- மனுதாரர்.

 

தஞ்சாவூர் சுவாமி மலையைச் சார்ந்த சுந்தர  விமல்நாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள  மனுவில், ‘தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென பல ஆண்டுகளாக தொடர்ந்து கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு தமிழக விவசாயிகள் தொடர்ந்து தாங்கள் சாகுபடி செய்த கரும்புகளை வழங்கி வருகின்றனர். இந்த கரும்புகளுக்கு ஒன்றிய அரசு சட்டபூர்வமான விலையை நிர்ணயம் செய்துள்ளது. இந்த விலையின் அடிப்படையில் விவசாயிகள் கரும்பு அலைகளுக்கு கரும்புகளை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்ட கரும்புகளுக்கு உரிய தொகையை 14 நாள்களுக்குள் கொடுக்க வேண்டும் என்பது சட்டம். அவ்வாறு கொடுக்க தவறினால் அதற்கான உரிய வட்டி 15 சதவீதத்துடன் சேர்த்து வழங்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் பல சர்க்கரை ஆலைகள்  2017 ஆம் ஆண்டு முதல் 2023'வரை  வட்டித்தொகை முறையாக வழங்க வில்லை.

 




 

இதனால் கரும்பு விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும் விவசாய கடன் வாங்கியோர் வங்கியில் வட்டியுடன் கட்ட வேண்டிய சூழல் உள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கால தாமதத்திற்கான வட்டித் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு குறித்து மத்திய அரசின் வேளாண் துறை முதன்மைச் செயலர் மற்றும் திருச்சி, தஞ்சை, தேனி மதுரை சிவகங்கை புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்ட ஆட்சியர்கள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.