வைகை ஆற்றில் குளிக்க சென்ற 4 ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு - காவல்துறையினர் விசாரணை. 

 

வைகை ஆற்றில் தண்ணீர்

 

மதுரை வைகை அணையில் இருந்து பாசன தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் ஆற்றில் தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் வைகையாற்றின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் குளித்துவருகின்றனர். இதனிடையே மதுரை விரகனூர் பகுதியை சேர்ந்த ஜீவா என்பவரின் மகனான விஜய் என்ற 4-ம் வகுப்பு மாணவன் இன்று காலை தனது நண்பர்களுடன்  விரகனூர் வைகையாற்று பகுதிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆற்று நீரில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற நீரில் மூழ்கினான்.  ’காப்பாற்றுங்கள்.., காப்பாற்றுங்கள்’ என கூச்சலிட்ட நிலையில் விஜய் நீரில் மூழ்கியதை பார்த்த  நண்பர்கள் அருகில் சென்று காப்பாற்ற முயன்றனர். ஆனால் அருகில் செல்ல முடியாத நிலையில் ஆற்றில் இருந்து வெளியேறி பொதுமக்களை காப்பற்ற அழைத்துள்ளனர். அப்போது பொதுமக்கள் வந்து பார்த்தபோது சிறுவன் விஜய் ஆற்று நீரில் மூழ்கி இழுத்துசெல்லப்பட்டது தெரியவந்துள்ளது. 

 

உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை

 

இதனையடுத்து ஆற்றுப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள்  குவிந்தனர். இதை தொடர்ந்து சிலைமான் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில்  சம்பவ இடத்திற்கு அனுப்பானடி தீயணைப்புத்துறையினர் வருகை தந்து சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒரு மணி நேரத்தில் பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கிடந்த சிறுவனை உடலை மீட்டனர். அப்போது சிறுவனின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனையடுத்து சிறுவனின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டது. மதுரை வைகையாற்றில் குளிக்க சென்ற 10 வயது சிறுவன் நீரில்  உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிலைமான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

கடந்த சில நாட்களுக்கும் முன் 11-ம் வகுப்பு சிறுவன் நண்பர்களுடன் சென்று கிணற்றில் குள்ளிக்க சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது வைகை ஆற்றில் மற்றொரு சிறுவன் நீரில் மூழ்கி இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.