இளையராஜா


இளையராஜாவின் பாடல்களின் காப்புரிமை தொடர்பான விவகாரம் சமூக வலைதளத்தில் பெரும் விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.  தான் இசையமைத்த பாடல்களின் மேல் தனக்கே முழு உரிமை உள்ளதாக இளையராஜா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து " சில பாடல்களில் இசை சிறந்ததாக இருக்கும் சில பாடல்களில் மொழி சிறந்ததாக இருக்கும். இதை புரிந்துகொண்டவர் ஞானி புரிந்துகொள்ளாதவன் அஞ்ஞானி  என்று பாடலாசிரியர் வைரமுத்து இளையராஜாவை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.


இளையராஜா பற்றி வைரமுத்து பேசிய கருத்திற்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் கடுமையாக கருத்து தெரிவித்திருந்தார்.  “இளையராஜா இல்லை என்றால் வைரமுத்து இல்லை, இனிமேல் இளையராஜா பற்றி பேசினால் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்” என்று அவர் தெரிவித்திருந்தார். 


“இசை பெரிதா மொழி பெரிதா?” என்று இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் மீம்கள் பகிரப் பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் இளையராஜா பேராசைப்படுவதாக அவரை பலர் விமர்சித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் இளையராஜா வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.


இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமையை தொடர்பான நீதிமன்ற விசாரணையில் ஒரு பாடலுக்கு இசையமைப்பாளட் உரிமை கோருவதைப் போல் பாடகர் , பாடலாசிரியர் ஆகியவர்களும் உரிமை கோரினால் என்னவாகும் என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஜூன் இரண்டாம் வாரம் நடைபெற இருக்கிறது. பாடல்கள் மூலமாக இளையராஜா சம்பாதித்த தொகை யாருக்கு சொந்தமானது என்பது நீதிபதியின் முடிவுக்கு கட்டுப்பட்டது.


மற்றவர்களை கவனிப்பது என்னுடைய வேலை இல்லை!






இந்த வீடியோவில் அவர் “ எல்லாருக்கும் வணக்கம். தினமும் ஏதோ ஒரு வகையில் என்னைப் பற்றிய நிறைய செய்திகளும் வீடியோக்களும் வருவதாக என்னுடைய நண்பர்கள் வழியாக தெரிந்துகொள்கிறேன். மற்றவர்களை கவனிப்பது என்னுடைய வேலை இல்லை. என்னை கவனிப்பது தான் என்னுடைய வேலை.


இந்தப் பிரச்சனைகள் எல்லாம் சென்றுகொண்டிருக்கும் போதே நான் ஒரு முழு சிம்ஃபனியை அமைத்துவிட்டேன். கடந்த 35 நாட்களில் மற்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்து, ஒரு சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு இந்த சிம்ஃபனியை முழுவதுமாக உருவாக்கி இருக்கிறேன். இந்த சிம்ஃபனியில் திரையிசைப் பாடல்களின் எந்த பிரதிபலிப்பும் இருக்காது. அப்படி இருந்தால் அது சிம்ஃபனியும் இல்லை. இதை உங்களுடன் தெரிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.