இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் மல்யுத்த வீரர்கள் கடந்த சில வாரங்களாக நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா தினத்தில் ஜந்தர் மந்தரில் போராடிய வீரர்களை கைது செய்ததற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
பெண்களின் மரியாதை:
நீண்ட போராட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மல்யுத்த வீரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முன்னதாக, அமித்ஷாவுடன் நீண்ட நேரம் நடந்த சந்திப்பின்போது பிரிஜ்பூஷண்சிங் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறியிருப்பதாவது, இந்த சம்பவம் எங்கள் மல்யுத்த சகோதரிகளையும், மல்யுத்த மகள்களையும் நொறுக்கிவிட்டன. இதனால், நாங்கள் ஒரு மாபெரும் பஞ்சாயத்து( மகாபஞ்சாயத்து) ஒன்றை நடத்துவோம். அதற்கான அழைப்பை விடுப்போம். அதற்கான இடத்தை விரைவில் முடிவு செய்வோம்.
அந்த பஞ்சாயத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பிளவுபடுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்த மோதல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கான அல்ல. பெண்களின் மரியாதைக்காக. நாம் பிளவுபட்டால் நாம் வெற்றி பெற முடியாது.” இவ்வாறு அவர் கூறினார்.
மகா பஞ்சாயத்து:
மல்யுத்த வீரர்களுக்காக இந்த மாதத்தில் நடத்தப்படும் 3வது மகாபஞ்சாயத்தாக இவர்கள் அறிவித்துள்ள மகாபஞ்சாயத்து அமைந்துள்ளது. மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக கடந்த 1-ந் தேதி உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் முதல் மகாபஞ்சாயத்து நடந்தது. கடந்த 3-ந் தேதி ஹரியானாவில் உள்ள குருஷேத்ராவில் 2வது மகாபஞ்சாயத்து நடந்தது.
மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சூழலில் பிரிஜ்பூஷன்சிங் மீது எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்காத நிலையில், பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ்பூஷன்சிங்கை இந்த அரசு அவரது பதவியில் இருந்து நீக்காவிட்டால், அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தால் 2024 தேர்தலில் இருந்து 100 சதவீதம் அவர் நீக்கப்படுவார் என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் எச்சரித்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரிஜ்பூஷண்சிங் மீது தக்க நடவடிக்கை எடுக்காததை வலியுறுத்தி கங்கை நதிக்கரையில் நாட்டிற்காக இதுவரை பெற்ற பதக்கங்களை மல்யுத்த வீரர்கள் வீசச்சென்றதும், அவர்களை வட இந்திய விவசாயிகள் சமாதனப்படுத்தியதும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Crime: 'அடங்காத சாதிவெறி'.. அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடியதற்காக இளைஞர் படுகொலை - பகீர் பின்னணி..!
மேலும் படிக்க: Amit Shah Met Wrestlers: ஒருவழியாக மல்யுத்த வீரர்களை சந்தித்த அமித் ஷா..! பாஜக எம்.பி. மீது பாலியல் குற்றச்சாட்டு