தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் சாதிய பாகுபாடு மற்றும் சாதிய கொடுமைகள் மிக அதிகளவில் உள்ளது என்பதை உணர்த்தும் விதமாக பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.


அம்பேத்கர் பிறந்தநாள்:


மகாராஷ்ட்ராவில் அமைந்துள்ளது போந்தர் ஹவேலி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் அக்‌ஷய் பலேராவ். அவருக்கு வயது 24. இவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை அவர் வசிக்கும் பகுதியில் கொண்டாடியுள்ளார். அம்பேத்கரின் பிறந்தநாளை அக்‌ஷய் கொண்டாடியது அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.


இந்த நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை அக்‌ஷய் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடியதை பிடிக்காத சமூகத்தைச் சேர்ந்த தரப்பினரின் திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக அக்‌ஷய் சென்று கொண்டிருந்தார். அவரை கண்ட அந்த சமூகத்தைச் சேர்ந்த சிலர் கும்பலாக வாள் உள்பட ஆயுதங்களுடன் சென்று அக்‌ஷயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இளைஞர் கொலை:


அப்போது, அக்‌ஷயுடன் உடனிருந்த அவரது சகோதரர் ஆகாஷ் அவர்களை சமாதனப்படுத்தி அவரது தம்பியை அழைத்து வர முயற்சித்துள்ளார். ஆனாலும், அந்த கும்பல் ஆகாஷ் மற்றும் அக்‌ஷய் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளது. மேலும், அந்த கும்பல் தங்களிடம் இருந்த கத்தியால் அக்‌ஷயை குத்தியுள்ளனர். அவர்கள் தாக்கியதில் அக்‌ஷய் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். படுகாயமடைந்த அக்‌ஷயை அவரது சகோதரர் ஆகாஷ் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.


ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அக்‌ஷய் பலேராவ் வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கு, கொலை முயற்சி, கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ள அக்‌ஷயின் சகோதரர் ஆகாஷ், தாக்கிய கும்பலில் இருந்த ஒருவர் “ இந்த கிராமத்தில் இவர்கள் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடியதற்காகவே இவர்களை கொலை செய்ய வேண்டும்” என்று ஆத்திரத்துடன் கூறியதாக கூறியுள்ளார்.


அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடியதற்காக 24 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது பிறந்த நாளை கொண்டாடியதற்காக இளைஞர் படுகொலை செய்யப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க: Odisha Train Accident: 275 பேர் உயிரை பறித்த கோர விபத்து..51 மணி நேர போராட்டம்.. பாலசோர் பகுதியில் மீண்டும் ரயில் சேவை தொடக்கம்


மேலும் படிக்க: Virender Sehwag: ஒடிஷா கோர ரயில் விபத்து- உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக அறிவித்த சேவாக்..