ஒடிசா ரயில் விபத்து சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சூழலை பயன்படுத்தி, பெரும்பாலான விமான சேவை நிறுவனங்கள் பன்மடங்கு டிக்கெட் விலையை உயர்த்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தும் - ரயில் சேவை பாதிப்பும்:
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹாநகா பகுதியில் கடந்த 2ம் தேதி மாலையில், 3 ரயில்கள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலரது உடல் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேநேரம், உடல் நசுங்கி பலியான பலரது உடல்கள் இதுவரை அடையாளம் காணமுடியாத சூழலில் தான் உள்ளன. இதனிடையே, நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து ஏற்படுத்திய தாக்கம், ரயில் பயணம் என்றாலே பொதுமக்களிடையே ஒரு அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது. அதோடு, விபத்தால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளுக்கான ரயில் சேவை இன்னும் முழுமையாக சீரடையவில்லை.
அச்சத்தால் விமான பயணம்:
பேரிடராக கருதும் அளவிற்கு நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்து நாட்டில் நடந்து முடிந்துள்ளது. இதனால், ரயில் பயணங்கள் மீதான ஒரு வித பயத்தின் காரணமாகவே நடுத்தர மக்கள் கூட பாதுகாப்பு கருதி விமான பயணத்தை மேற்கொள்ள ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். ஆனால், அரசு விமானப்போக்குவரத்து துறை என ஒன்று இந்தியாவில் இல்லாத நிலையில், விமான பயணத்திற்கு முழுமையாக பொதுமக்கள் தனியார் நிறுவனங்களையே சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது.
சென்னை - டெல்லி டிக்கெட் விலை
சென்னை - புவனேஷ்வர் டிக்கெட் விலை
அச்சுறுத்தும் டிக்கெட் விலை:
இந்த சூழலை பயன்படுத்தி பல விமான சேவை நிறுவனங்கள் டிக்கெட் விலை பன்மடங்கு உயர்த்தி பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வழக்கமாக சென்னையில் இருந்து ஒடிசா தலைநகர் புவனேஷ்வருக்கு செல்ல, விமானத்தில் 5000 ரூபாயிலிருந்து டிக்கெட் விலை தொடங்கும். கடைசி நேரத்தில் முன்பதிவு செய்தால் கூட 15 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே விற்பனையாகும். ஆனால், தற்போதோ சென்னை - புவனேஷ்வருக்கான விமான டிக்கெட் விலை 10 மடங்கு அதிகரித்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது. இதேபோன்று டெல்லி மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களுக்கான விலையும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் அட்டூழியம்:
அவசரத்திற்கும், அத்தியாவசதியத்திற்காகவும் வேறு வழியின்றி பொதுமக்கள் விமான பயணத்தை நாடும் நிலையில், அதை பயன்படுத்தி மனிதாபிமானமின்றி சில நிறுவனங்கள் லாபம் பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள், என்னதான் தனியார் மயமாக இருந்தாலும் அடிப்படை மனிதாபிமானத்துடன் ஈவு, இரக்கம் என்பது சற்றேனும் இருக்க வேண்டும். ஆனால், இந்த இக்கட்டான நிலையில் தனியார் விமான சேவை நிறுவனங்களின் செயல்பாடு என்பது ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயங்களால் சுயநினைவின்றி கிடந்தவர்களின், உடைமைகளை திருடிச் சென்ற கயவர்களை காட்டிலும் கேவலமானது என்றே கூற வேண்டும்.
அரசின் நடவடிக்கை என்ன?
தற்போது நிலவும் சூழலை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் விமான டிக்கெட்களின் விலையை உயர்த்தக் கூடாது என, ஏற்கனவே மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. ஆனால், அதனை சற்றும் பொருட்படுத்தாமல், அதிகப்படியான விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக எல்லாம் நடைபெறவில்லை. குறிப்பிட்ட நிறுவனங்களின் இணையதள பக்கங்களில் வெளிப்படையாகவே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.