பாலியல் புகார் தொடர்பாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, மல்யுத்த வீரர்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மல்யுத்த வீரர்களை சந்தித்த அமித் ஷா:
டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் மீது விசாரணை நடத்தக்கோரி மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தினர் என தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை இரவு இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், நள்ளிரவு வரை நீடித்த இந்த சந்திப்பின் போது, பிரிஜ் பூஷன் மீது விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் வென்று பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச முயன்றது போன்ற பல்வேறு போராட்டங்களில் வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், அரசு தரப்பில் நடத்தப்பட்ட முதல் உயர்மட்ட பேச்சுவார்த்தை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் மல்யுத்த வீரர்களின் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஜுன் 9ம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் கைது செய்யப்படாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படுமென, விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் எச்சரிக்கை விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மல்யுத்த வீரர்கள் போராட்டம்:
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பாஜக எம்,பி. பிரஜ் பூஷண் மீது நடவடிக்கை கோரி பல நாட்களாக மல்யுத்த வீரர்கள் போராடி வருகின்றனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகும் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து கடந்த 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாக சென்ற அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டதோடு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்தியாவிற்கு கோரிக்கை:
இதுதொடர்பாக சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு “கடந்த சில மாதங்களாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இந்தியாவில் மல்யுத்த வீரர்கள் போராடும் சூழ்நிலையை மிருந்த கவலையுடன் உலக மல்யுத்த கூட்டமைப்பு கவனித்து வருகிறது. மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணி சென்றதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது மற்றும் ஒரு மாதத்துக்கும் மேலாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டது ஆகிய சம்பவங்களுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்” என அறிக்கை வெளியிட்டு இருந்தது.
எச்சரிக்கை:
அதோடு, இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு மற்றும் இந்திய மல்யுத்த சம்மேளனம் ஆகியவற்றின் ஒக் கமிட்டியிடம் இருந்து அடுத்த பொது கூட்டமைப்பு தேர்தல் குறித்து உலக மல்யுத்த கூட்டமைப்பு கூடுதல் தகவல்கள் கோரும். இதற்கு 45 நாள் கெடு வழங்கப்படும். அவ்வாறு செய்யத் தவறினால், உலக மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய மல்யுத்த சம்மேளத்தை சஸ்பெண்ட் செய்யும். இதனால் விளையாட்டு வீரர்கள் எந்த நாட்டையும் சாராத நடுநிலைக் கொடியின் கீழ் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்” எனவும் எச்சரித்து இருந்தது.