திருமணத்துக்குப் பின் குண்டான காரணத்தால் பெண் ஒருவருக்கு முத்தலாக் வழங்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.


திருமணமாகி 8 ஆண்டுகளுக்குப் பின் முத்தலாக்


28 வயது நிரம்பிய நஜ்மா பேகம் உத்தரப் பிரதேசம், மீரட்டில் வசித்து வருகிறார். திருமணத்துக்குப் பின் தனது உடல் எடை அதிகரித்ததால் தன் கணவர் தனக்கு முத்தலாக் அளித்துள்ளதாக இவர் முன்னதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


எட்டு ஆண்டுகளுக்கு முன் முகம்மது சல்மான் என்பவரை மணந்த இந்தப் பெண் மணந்த நிலையில், இத்தம்பதிக்கு 7 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.


முன்னதாக இவரது உடல் எடை அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில், இவரது கணவர் அவரை மோசமாகப் பேசி சீண்டிய வண்ணம் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் நஜ்மாவை கொடுமைப்படுத்தத் தொடங்கியதுடன், வீட்டை விட்டும் துரத்தியுள்ளார்.


இப்பெண் கடந்த ஒரு மாதமாக தன் பெற்றோர் வீட்டில் வசித்து வரும் நிலையில், முன்னதாக ஐந்து பேருடன் அப்பெண் வீட்டுக்கு சென்ற முகம்மது சல்மான் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.


அதனைத் தொடர்ந்து முத்தலாக் சொல்லிவிட்டு அப்பெண்ணை விவாகரத்து செய்து விட்டதாகக் கூறி திரும்பியுள்ளார். இந்நிலையில் நஜ்மாவின் புகாரையேற்று காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உணவு ஆறியதால் முத்தலாக்


நாட்டில் முத்தாக்குக்கு எதிரான சட்டம் நடைமுறைக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் பல இடங்களில் முத்தலாக் வழங்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.


முன்னதாக் இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட்டில் மனைவி தனக்கு சூடான உணவை பரிமாறவில்லை எனக் கூறி கணவன் தலாக் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியை சேர்ந்த முகமது சல்மான் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்திருக்கிறார். தனது மனைவியிடம் முகமது சல்மான் சமைத்த உணவு சூடாக இல்லை என சண்டையிட்ட அவர் தொடர்ந்து தன் மனைவிக்கு மூன்று முறை தலாக் கூறியதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் முன்னதாக அப்பெண் உம்ரா காவல் நிலையத்தை அனுகியிருக்கிறார். முத்தலாக் முறையில் விவாகரத்து  கொடுத்து  ஐந்து மாதங்களுக்குப் பிறகு கணவர் முகமது சல்மான் மற்றும் மாமியார் மீது புகார் கொடுத்துள்ளார்.


முன்ன்னதாக இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரிலான முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து முத்தலாக்குக்கு எதிரான புதிய சட்டம்  2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.


இதன்படி, தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். மேலும் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் குழந்தைக்கு கணவன் நிதி வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம்.