அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சொகுசு காரில் திரும்பி கொண்டிருந்த டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் காரானது பால்கர் என்ற இடத்தில் சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்துக்குள்ளான காரில் 4 பேர் இருந்தனர். சம்பவ இடத்திலேயே சைரஸ் மிஸ்திரி உட்பட இருவர் உயிரிழந்தனர். மேலும் அவர்களுடன் காரில் பயணித்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


யார் இந்த சைரஸ் மிஸ்திரி:


சைரஸ் மிஸ்திரி  1968 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் அயர்லாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர். பள்ளி படிப்பை மும்பையில் படித்த இவர், பட்டப்படிப்பை லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் முடித்தார். 2011 ஆம் ஆண்டு, டாடா சன்ஸ் குழுமத்தின் துணை தலைவராக பொறுப்பேற்றார்.


மேலும் டாடா இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா பவர், டாடா டெலிசர்வீசஸ், இந்தியன் ஹோட்டல்கள், டாடா குளோபல் பானங்கள் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் உள்ளிட்ட அனைத்து முக்கிய டாடா நிறுவனங்களின் தலைவராகவும் இருந்தார்.


பின்னர் 2012 ஆம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ரத்தன் டாடா விலகியதையடுத்து, தலைமைப் பொறுப்பிற்கு சைரஸ் மிஸ்திரி தேர்வு செய்யப்பட்டார். வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர், டாடா குழுமத்தின் தலைமை பொறுப்பேற்றது முதல் முறையாகும்.


2016 ஆம் ஆண்டு, டாடா குழுமத்தின் தலைமை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இவரின் தந்தை பலோன்ஜி ஷபூர்ஜி மிஸ்திரி கடந்த ஜூன் மாதம் 29-ஆம் தேதி காலாமானார். இவர் டாடா நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்திருர்ந்தார். பலோன்ஜி ஷபூர்ஜி மிஸ்திரி கடந்த 2016 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதை பெற்றார்.


இந்நிலையில் சைரஸ் மிஸ்திரியின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




 


அவரது மறைவுக்கு நாட்டில் உள்ள தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.