1. மின் உற்பத்தி நிலையங்களின் தேவைகளை சந்திக்கும் அளவுக்கு போதுமான நிலக்கரி நாட்டில் உள்ளது என நிலக்கரித்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மின் விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்ற பயம் முற்றிலும் தவறானது. மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு சுமார் 72 லட்சம் டன்கள். இது 4 நாட்களுக்கு போதுமானது. நிலக்கரி இந்தியா நிறுவனத்திடம் 400 லட்சம் டன்களுக்கு மேல் நிலக்கரி இருப்பு உள்ளது. அது மின் உற்பத்தி நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


2. நிலக்கரி நிறுவனங்களில் இருந்து அதிக அளவிலான சப்ளை காரணமாக, அனல் மின்நிலையங்களில் மின்  உற்பத்தி, இந்தாண்டு சுமார் 24 சதவீ.தம் அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தேவையின் தின சராசரி அளவு 18.5 லட்சம் டன்கள். இங்கு தினசரி நிலக்கரி விநியோகம் சுமார் 17.5 லட்சம் டன்களாக உள்ளது. பருவமழை நீடிப்பதன் காரணமாக, நிலக்கரி விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டது.   


3. ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் கனமழை பெய்தும், பொருளாதார மீட்பு காரணமாக, மின் தேவை அதிகரித்துள்ளது. டிஸ்காம் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப, முழு மின் விநியோகத்தை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 


4. இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி விலை அதிகரித்தன் காரணமாக, உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. தற்போதைய நிலக்கரி கட்டுப்பாட்டுக்கு, இதுவும் ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது.   



         


5. உண்மை மிகவும் சிக்கலானது: இந்த நிதியாண்டில் ( 2021ஏப்ரல் முதல் 2022 மார்ச் வரை) 660 மில்லியன் டன் நிலக்கரியை  உற்பத்தி செய்ய நிலக்கரி இந்திய நிறுவனம் திட்டமிட்டிருந்தது. 


 



 


கடந்த செப்டம்பர் 21ம் தேதி வரை,  இந்தியாவில் 237.35 மில்லியன் டன் நிலக்கரி மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 23 மில்லியன் டன் அளவு குறைவாகும். மேலும், செப்டம்பர் 21ம் தேதி வரை, நிலக்கரி விநியோகம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 58  மில்லியன் டன் குறைவானதாக இருந்தது. 



இந்த நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்படப்போகும் பிரச்சனைகள் குறித்த கருத்து பரிமாற்றங்கள்  கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இருந்தே நடைபெற்று வந்தது (ஆதாராம் - கீழே கொடுக்கப்பட்ட சுற்றறிக்கை) . இருந்தாலும், நிலக்கரி இந்திய நிறுவனம் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததும் பிரச்சனையின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது.   



நிலக்கரி பற்றாக்குறையை  நிவர்த்தி செய்யுங்கள் - அமைச்சக செயலாளர் நிலக்கரி இந்திய நிறுவனத்துக்கு அனுப்பிய சுற்றறிக்கை  


 

 


    


6. முன்னதாக, டெல்லி மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் சப்ளை செய்யும் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு ஒரு  நாட்களுக்கு மேல்  தாங்காது என்று அம்மாநில மின்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.   


7. டெல்லியில் இரண்டாவது கொரோனா அலையின் பொது  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவ ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதைப் போன்ற சூழல் தற்போது எழுந்திருப்பதாக  டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா ஆக்சிஜன் பற்றாக்குறையை மத்திய அரசு ஒத்துக்கொள்ளாததைப் போன்று தற்போதும் மௌனம் காத்துவருவதாகவும் சாடினார். 


8. முன்னதாக, டெல்லி மின் விநியோக நிறுவனங்களுக்கு தேவைக்கேற்ப மின்சாரத்தை விநியோகிக்க, மத்திய மின்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


9. டிஸ்காம் நிறுவனங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க என்டிபிசி (தேசிய அனல் மின் கழகம்) மற்றும் டிவிசி (தாமோதர் பள்ளத்தாக்கு கழகம்) நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிவாயுவும், அனைத்து இடங்களில் இருந்தும் பெற கெயில் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான மின்சாரம் கிடைத்தும், மின்வெட்டு நடவடிக்கையில் எந்த டிஸ்காம் நிறுவனங்களாவது ஈடுபட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 


10. மின் உற்பத்தி நிலையங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், பிரதமர் மோடி இதில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.   


மேலும், வாசிக்க: 


Coal Shortage News: தமிழ்நாட்டை நெருங்குதா மின்வெட்டு? நிலக்கரி கையிருப்பு என்ன? முழு விவரம்!


Coal shortage | மின் பற்றாக்குறை.. பீக் நேரங்களில் ஏ.சி. வேண்டாம்.. பொதுமக்களுக்கு திடீர் உத்தரவு!