மோல்டோ/சுஷுல் எல்லையோர சந்திப்பு மையத்தில் இந்திய-சீன ராணுவ படைப்பிரிவுகளின் கமாண்டர்கள் அளவிலான பதிமூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை இந்திய ராணுவ அமைச்சகம் வெளியிடவில்லை. ஆனால், இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவின் கருத்து பரிமாற்றங்கள் நியாமற்றதாகவும், எதிர்மறையாகவும் இருப்பதாக சீன விடுதலை ராணுவத்தின் மேற்கு படைப்பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த வாரங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு நெடுகே, இந்திய பகுதியின் பல இடங்களிலும் சீன தரப்பினர் அத்துமீறி வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. முன்னதாக, தவாங் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள ராணுவ நிலைக்கு அருகில் சீனப் படைகள் வந்தன. இருந்தாலும், பெரும் தள்ளுமுள்ளு மோதல் போக்கு தவிர்க்கப்பட்டது. அதேபோன்று, செப்டம்பர் மாத இறுதியில், சீனப் படையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் உத்தராகாண்ட் மாநிலத்தின் பாராஹோட்டி பகுதியில் இந்திய எல்லையைக் கடந்து நுழைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியன. சீன ராணுவத்தினர் இந்தியாவின் பாலம் உள்பட பல பொதுச் சொத்துகளைச் சேதம் செய்துவிட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
Galwan Valley Clash: கல்வான் பள்ளத்தாக்கு மோதல் யார் காரணம்? சீனாவின் கருத்துக்கு இந்தியா பதில்
ராணுவ தளபதி முகுந்த் நாரவனேயை கருத்து: சீன தரப்பினரின் சமீபத்திய அத்துமீறல்கள் குறித்து கருத்து தெரிவித்த இந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனேயை, "உண்மை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிக்கு அருகே இந்திய கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு வருகிறது. அதற்கு, ஈடுகொடுக்கும் வகையில் சீன தரப்பினரும் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் எந்த அத்துமீறல் நடந்தாலும், இந்திய ராணுவத்தினர் இப்போது உறுதியாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
தற்சமயம், முழுமையான படை விலகல் செயல்முறை என்பது மிகவும் சிக்கலானதாக உணர்கிறேன். எல்லையின் நெடுகே, இரு தரப்பினரும் படைக் குவிப்பை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
இந்திய- சீனா எல்லை பிரச்சனை: கடந்தாண்டு, இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போது, உண்மை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிக்கு சீன படையினர் பெருமளவில் ஊடுருவத் தொடங்கினர். 2020 மே 5ம் தேதி சீன ராணுவம் பான்காங் ஏரியின் தென்கரைப் பகுதியில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது. இதனையடுத்து, கிழக்கு லடாக் பகுதியில் இந்திய தரப்பினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஜூன் 15ஆம் தேதி கல்வான் பகுதியில் மிகப்பெரிய நடந்த வன்முறை அரங்கேறியது. இதில், கர்னல் சந்தோஷ் பாபு உட்பட 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் சீன தரப்பினர் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டதாலும், அதை நிறுத்த மறுத்த காரணத்தாலும் தான் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய-சீன ராணுவ படைப்பிரிவுகளின் கமாண்டர்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன் பயனாக, 2021 ஆகஸ்ட் மாதம் கோக்ரா பகுதியில் முழுவதுமாக இருதரப்பினரும் முழுமையான படை விலகலை உறுதி செய்தனர். கடந்த்காண்டு ஆகஸ்ட் மாதம் பான்காங் ஏரியின் தென்கரை மற்றும் வடகரைப் பகுதியில் படைவிலகல் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, கிழக்கு எல்லைப் பகுதியில் சீனப் படையினர் அத்துமீறல்களைத் தொடங்கியுள்ளனர்.