நவீன இந்திய பெண்கள் திருமணத்திற்கு பிறகும், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாமல் தனிமையில் இருக்க விரும்புகிறார்கள் மற்றும் மற்றும் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை விரும்புகிறார்கள் என்று கர்நாடக அமைச்சர் சுதாகர் பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலக மனநல தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே. சுதாகர் பேசுகையில், "இன்று, இதைச் சொல்வதற்கு நான் வருந்துகிறேன். இந்தியாவில் உள்ள பல நவீன பெண்கள் தனிமையில் இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொண்டாலும், அவர்கள் குழந்தையை பெற்றெடுக்க விரும்பவில்லை. அவர்கள் வாடகைத் தாய்மையை விரும்புகிறார்கள். எனவே நமது சிந்தனையில் ஒரு முன்னுதாரண மாற்றம் உள்ளது. துரதிருஷ்டவசமாக, இன்று நாம் மேற்கத்திய வழியில் செல்கிறோம். பெற்றோர் நம்முடன் வாழ்வதை நாம் விரும்பவில்லை. தாத்தா பாட்டி நம்முடன் இருப்பதை மறந்துவிட்டோம்” என்று கூறினார்.
இந்தியாவில் மன ஆரோக்கியம் பற்றி பேசிய அமைச்சர், “மன அழுத்த மேலாண்மை ஒரு கலை. இந்த கலையை நாம் இந்தியர்களாகக் கற்க வேண்டியதில்லை. மன அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பதை நாம் உலகுக்கு போதிக்க வேண்டும். ஏனென்றால் யோகா, தியானம் மற்றும் பிராணாயாமம் ஆகியவை நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உலகிற்கு கற்பித்த அற்புதமான கருவிகள்.
கொரோனா தொற்றால், உறவினர்களால் அவர்களின் நெருங்கிய மற்றும் அன்பானவர்களின் உடலைத் தொட முடியவில்லை. இது அவர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, அரசு, கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கத் தொடங்கியது. இன்றுவரை நாங்கள் கர்நாடகாவில் 24 லட்சம் கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். இதைச் செய்த வேறு எந்த மாநிலமும் எனக்குத் தெரியாது” என்று கூறினார்.
மேலும், “செப்டம்பர் முதல் ஒவ்வொரு மாதமும் கர்நாடகாவிற்கு 1.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்கிய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதனால், மாநிலத்தில் தடுப்பூசி பாதுகாப்பு அதிகரித்தது.முழு மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் தீவிரமான பணியை நாடு மேற்கொண்டதால், தடுப்பூசி இயக்கம் தொடங்கியதில் இருந்து இன்றுவரை 94 கோடி தடுப்பூசிகளை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் ஒரே நாடு நம் நாடு மட்டுமே. மற்ற இடங்களில், மக்கள் தடுப்பூசி ஒன்றுக்கு 500 1,500 முதல் ₹ 4,000 வரை செலுத்த வேண்டும்" என்று கூறினார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்