நாடெங்கும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மின்பற்றாக்குறை காரணமாக நுகர்வை குறைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களை ஆந்திர மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஆற்றல் துறை செயலாளர் ஸ்ரீகாந்த் நகுலப்பள்ளி காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மின் பயன்பாடு அதிகமாக இருப்பதன் காரணமாக அந்த நேரங்களில் பொதுமக்கள்  ஏசி பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 


இந்த நேரங்களில் ஏசியின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் 10 மில்லியன் யூனிட் வரை மின்சாரத்தை சேமிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் பயன்பாடு 20 சதவீதம் வரை அதாவது 190 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலக்கரி பற்றாக்குறையைக் காரணம் காட்டி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.  நிலக்கரி கையிருப்பு ஓரிரு நாட்களுக்கே தாங்கும் என்பதால் பிரதமர் மோடியிடம் அவசர உதவியைக் கோரியிருந்தார். மின் தடை, அறுவடைக் காலத்தில் விவசாயிகளை பெருமளவு பாதிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், அறுவடை காலத்தில் அதிக அளவு நீர் தேவைப்படும், இல்லையென்றால்  விவசாய நிலங்கள் காய்ந்து விவசாயிகள் பெருமளவு நஷ்டத்தை சந்திக்க நேர்ந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனவே நிலக்கரி மற்றும் ரயில்வே அமைச்சகங்களுக்கு மாநிலத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு 20 நிலக்கரி ரேக்குகளை ஒதுக்குமாறு பிரதமரை வலியுறுத்தினார்.





மின்பற்றாக்குறையை ஈடுகட்ட பெருமளவில் வெளிச்சந்தையை சார்ந்திருப்பதாகவும், விலை யுனிட் 4 ரூபாய் 60 காசுகள் என்ற நிலையில் இருந்து 15 ரூபாயாக உயர்ந்திருப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி சுட்டிக்காட்டினார். அது சில சமயங்களில் ரூ. 20 என இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். நாட்டில் மின் உற்பத்தி குறைவாக இருப்பதால் சந்தையில் சில நேரங்களில் மின்சாரம் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தார். திட்டமிடப்படாத மின் வெட்டுக்கள் அமலானால் 2012 இல் ஏற்பட்டது போல அது சமூகத்தில் குழப்பமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 


குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள், நிலக்கரி பற்றக்குறையின் காரணமாக பாதிக்கும் குறைவான ஆற்றலை உற்பத்தி செய்வதால் அந்த மாநிலங்கள் மின் ஆற்றல் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. முன்னதாக, மின் நெருக்கடி நிலை குறித்து பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார். அதில்,மின்சார ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் நிலக்கரி அதிகரிக்கப்படாவிட்டால், தேசிய தலைநகரில் மின் நெருக்கடி ஏற்படலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில், நாட்டில் போதிய நிலக்கரி இருப்பு கையில் உள்ளது, மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பில் உள்ளதால் மின்சார தடை ஏற்படாது என  மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தற்போது தெரிவித்துள்ளார்.