குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான நகரம் வதோரா. வதோராவில் உள்ள பகுதி மஞ்சல்பூர். இந்த பகுதியில் ஏராளமான பள்ளிகள் உள்ளது. இங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்வதற்கு தனியார் வேன் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. பள்ளியின் சொந்த வேனாக இல்லாமல் வாடகைக்கு இயங்கி வரும் இந்த வேன் தினசரி பள்ளி மாணவ, மாணவிகளை அவர்களது வீட்டில் இருந்து பள்ளிக்கு ஏற்றிச் செல்வதும், பின்னர் மாணவிகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு இறக்கி விடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது.


ஓடும் வேனில் இருந்து கீழே விழுந்த மாணவிகள்:


இந்த நிலையில், வழக்கம்போல கடந்த 19ம் தேதி பள்ளி மாணவிகளை வேனில் ஓட்டுனர் ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது, மஞ்சல்பூரில் உள்ள துளசி ஷ்யாம் பகுதியில் உள்ள ஒரு வளைவில் ஒரு மாணவியை இறக்கி விட்டு, மீண்டும் வேனை ஓட்டுனர் இயக்கியுள்ளார். அப்போது, வேனின் கதவுகளை சரியாக அடைக்கவில்லை என்று தெரிகிறது.


இதனால், வேன் ஒரு மேட்டின் மீது ஏறி இறங்கியபோது வேனின் பின்பக்க கதவுகள் திறந்து கொண்டது. அப்போது, வேனில் இருந்த மாணவிகள் இருவரும் எதிர்பாராதவிதமாக சாலையிலே கீழே விழுந்தனர். ஓடும் வேனில் இருந்து மாணவிகள் இருவரும் அதிர்ச்சியில் அலறினர். அவர்கள் கீழே விழுந்ததை கண்டும், அவர்களது அலறல் சத்தத்தை கேட்டும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.






அதிர்ஷ்டவசமாக தப்பிய மாணவிகள்:


அவர்கள் உடனே கீழே விழுந்த பள்ளி மாணவிகளுக்கு உதவி செய்தனர். மாணவிகள் கீழே விழுந்ததை கண்ட ஓட்டுனர், அதிர்ச்சியடைந்து வாகனத்தை நிறுத்தினர். அப்போது, வேனில் இருந்த மற்றொரு மாணவி ஓடி வந்து கீழே விழுந்த தனது தோழிகளுக்கு உதவினார். இதை சற்றும் எதிர்பாராத ஓட்டுனர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தின்போது, பின்னால் எந்த வாகனமும் வரவில்லை. இதனால், மாணவிகள் லேசான காயத்துடன் தப்பினர்.


மாணவிகள் கீழே விழுந்த காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி.யில் பதிவானது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஓட்டுனரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி சார்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய ஓட்டுனரின் கவனக்குறைவால் மாணவிகள் கீழே விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: "மாடுகள் அடுத்தடுத்து பிடிபட்டால் ஏலம் விடப்படும்" அமைச்சர் கே. என். நேரு அறிவிப்பு!


மேலும் படிக்க: திருச்சியில் நள்ளிரவில் ஆட்சியர் - எஸ்பி அதிரடி நடவடிக்கை - 250 லிட்டர் கள்ளச்சாரயம் அழிப்பு