YSRCongress Office: ஒய்எஸ்ஆர் காங்கிரசின் அலுவலகம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது என, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அக்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


கட்சி அலுவலகம் இடிப்பு:


சனிக்கிழமை அதிகாலையில் அமராவதி தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையம் (சிஆர்டிஏ),  தாடேபள்ளியில் கட்டப்பட்டு வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு (ஒய்எஸ்ஆர்சிபி) சொந்தமான அலுவலக கட்டிடத்தை இடிக்கத் தொடங்கியது. அதிகாலை 5:30 மணிக்கு தொடங்கிய கட்டிடத்தை இடிக்கும் பணியில், பொக்லைன் இயந்திரரங்கள் மற்றும் புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டன. கட்டுமான பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து இருந்த நிலையில், அந்த கட்டிடம் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.


அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை:


தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர்  குற்றம் சாட்டியுள்ளனர். சிஆர்டிஏவின் பூர்வாங்க நடவடிக்கைகளை எதிர்த்து YSRCP முந்தைய நாள் உயர்நீதிமன்றத்தை அணுகிய போதும்,  இடிப்பு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னதாக, இடிப்பு நடவடிக்கையை நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.






சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - ஆளுங்கட்சி


தெலுங்கு தேசம் கட்சி தலைவர் பட்டாபி ராம் கொம்மாரெட்டி கூறுகையில், "சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி, எந்தவொரு சட்டவிரோத கட்டுமானத்தையும் இடிக்க வேண்டும். இன்று, சம்பந்தப்பட்ட துறைகளிடம் எந்த அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சி அலுவலகம். விதிகளின்படி இடிக்கப்பட்டது. ஒய்.எஸ். காங்கிரஸ் குற்றம் சாட்டுவது போல, அரசியல் பழிவாங்கலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.


வெடித்த சர்ச்சை:


சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட படகுத்துறை நிலத்தில் கட்டிடம் கட்டப்பட்டதாகவும், சட்டப்படி இடிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், நீதிமன்ற உத்தரவையும் மீறி அவசர கதியில் கட்டிடம் அகற்றப்பட்டுள்ள இந்த நடவடிக்கை  சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது அப்பட்டமான விதி மீறல் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


அன்று இடிக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு வீடு:


முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு அமராவதி பகுதியில் இருந்த சந்திரபாபு நாயுடுவின் வீடு, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக இடித்து தள்ளப்பட்டது. அப்போது ஜெகன் மோகனின் ஆட்சி மாநிலத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டு வளாகம் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டு இருப்பதாக இடித்து அகற்றப்பட்டது. அதைதொடர்ந்து, தற்போது அவரது கட்சியின் புதிய அலுவலக கட்டிடமும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதனால், ஆந்திராவில் பழிவாங்கும் அரசியல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதாக, அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.