வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து, அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார். வயநாட்டில் போட்டியிடுவதன் மூலம் தேர்தல் அரசியலில் முதல்முறையாக களமிறங்குகிறார் பிரியங்கா காந்தி.
இந்த நிலையில், வயநாட்டில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்காக மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என கடந்தாண்டு மம்தா ஆலோசனை கூறியிருந்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் போட்ட ஸ்கெட்ச்: இப்படிப்பட்ட சூழலில், பிரியங்கா காந்தியை ஆதரித்து மம்தா பரப்புரை செய்வார் என வெளியாகியுள்ள செய்தி தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த ஜூன் 20ஆம் தேதி, கொல்கத்தாவில் மம்தாவை சந்தித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் ஆலோசனை நடத்தியுளார்.
இந்த சந்திப்பை அடுத்து பிரியங்காவுக்காக பிரச்சாரம் செய்ய மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வடஇந்தியாவில் ஒரு தொகுதியிலும் தென் இந்தியாவில் ஒரு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் கிட்டத்தட்ட 3 லட்சத்து 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் 3 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
அரசியல் சாசன விதிகளின்படி, ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளிலும் எம்.பி.யாக தொடர முடியாது. எனவே, ஏதேனும் ஒரு தொகுதியில் இருந்து எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எந்த தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்? ராஜினாமா செய்யும் தொகுதியில் யார் போட்டியிடுவார்? என்பது பெரும் கேள்விகளாக இருந்தன.
வயநாட்டில் பிரச்சாரம் செய்யும் மம்தா: இதையடுத்து, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக ராகுல் காந்தி அறிவித்தார். அந்த தொகுதியில் பிரிங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியும் திரிணாமும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் உள்ளது. ஆனால், மேற்குவங்கத்தில் அவர்கள் தனித்தனியே போட்டியிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், திரிணாமுல் தனித்து களமிறங்கியது.
காங்கிரஸ் - திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி கைகூடாமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியே காரணம் என மம்தா குற்றம் சாட்டியிருந்தார். மேற்குவங்க காங்கிரஸ் தலைவராக உள்ள ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவராக நியமிக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.