டாடா ஸ்டீலின் ஜாம்ஷெட்பூர் ஆலையில் இருந்த 27 வருடங்கள் பழமையான, 110 மீட்டர் உயரமுள்ள பயனற்றுப்போன புகைபோக்கி (புகைக் குழல்) கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடிமருந்து வைத்து தகர்க்கும் முறையில் 11 வினாடிகளில் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில்  வெளியாகியுள்ளது. நொய்டாவின் இரட்டைக் கோபுரங்களை இடித்த அதே நிறுவனமான எடிஃபைஸ் இன்ஜினியரிங் இந்தியா நிறுவனம் தான் இந்த புகை போக்கியையும் இடித்துள்ளது. அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் அவ்னீஷ் குப்தா கூறுகையில், புகை போக்கியை இடித்தது என்பது மிகவும் வெற்றிகரமாக நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார். 


மேலும் இந்த இடிப்புச் சம்பவம் தொடர்பாக, ”ஜாம்ஷெட்பூர் ஆலையின் பேட்டரி எண் 5  27 வயதான 110 மீட்டர் உயர புகைபோக்கி  வெடி மருந்துகளைப் பயன்படுத்தி வெடிப்பு முறை மூலம்  இடிக்கப்பட்டது.  இந்த இடிப்பு முறை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பானது. இது நேரத்தை மிச்சப்படுத்தியது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருந்தது. 11 வினாடிகளில் புகை கோபுரம் இடிக்கப்பட்டது” என்று டாடா ஸ்டீல் ஆலையின் துணைத் தலைவர் அவ்னீஷ் குப்தா தெரிவித்தார்.






ஜே டெமாலிஷன் நிறுவனத்தால் ஆதரிக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் எடிஃபைஸ் இன்ஜினியரிங் இந்தியா இந்த பணியை நிறைவேற்றியது. நொய்டாவின் இரட்டைக் கோபுரங்களை ஆகஸ்ட் 28ஆம் தேதி இடித்தது இதே நிறுவனம்தான் இந்த புகை போக்கியை இடித்துள்ளது.  இந்த புகைபோக்கி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தூசியைக் கட்டுப்படுத்த 'நீர் திரைச்சீலைகள்' பயன்படுத்தப்பட்டன மற்றும் அதிர்வுகளை பரவாமல் தடுக்க 'பெர்ம்களுடன் கூடிய அகழிகளும்' (Trenches with berms) பயன்படுத்தப்பட்டன. 'ஸ்டீல் ரேப்'களின் பயன்பாடு குப்பைகள் சிதறாமல் தடுக்கிறது என்று டாடா ஸ்டீல் தரப்பில் அதன் சமூக வலைதளப் பக்கமான டிவிட்டர் தளத்தில், பதிவிடப்பட்ட ட்வீட்களில் தெரிவித்துள்ளது.






இதற்கு முன்னதாக இந்த நிறுவனம், உத்திர பிரதேச மாநிலத்தின் நொய்டாவில்  அனுமதி இல்லாமல்  விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரங்களை வெடிமருந்து வைத்து தகர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த கட்டிடத்தை இடிக்க இந்த நிறுவனம்  3,700 கிலோ வெடி மருந்தைப் பயன்படுத்தி  இடித்தது குறிப்பிடத்தக்கது.