"சாதி அமைப்பு இருக்கக் கூடாது என அடிக்கடி சொல்லப்படுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் சாதி மறைந்துவிடாது. எனவே, சாதி அடிப்படையிலான பாகுபாடு இருக்கக்கூடாது என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்" என பிராமணர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

சாதியை அழிக்க முடியாதா?

சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய கொடூரங்கள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பிறப்பின் அடிப்படையில் பாகுபாட்டை கற்பிக்கும் சாதிய அமைப்புக்கு எதிராக பல தலைவர்கள் தீவிரமாக இயங்கிய நிலையிலும், தற்போது வரை அதன் தாக்கம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. 

இந்த நிலையில், சாதியை அழிக்க முடியாது என்றும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டையே அழிக்க வேண்டும் என்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். நாசிக்கில் பிராமணர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இப்படிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் சொன்னது என்ன?

சாதி குறித்து விரிவாக பேசிய அவர், "சாதி அமைப்பு இருக்கக்கூடாது என்று அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் சாதி ஒருபோதும் மறைந்துவிடாது. சாதி அடிப்படையிலான பாகுபாடு இருக்கக்கூடாது என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இந்த பாகுபாட்டை அகற்றுவது நமது பொறுப்பு. இந்த பாகுபாட்டை நீக்க, நாம் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். சித்பவன் பிராமண சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், இந்த சமூகம் ஒருபோதும் தன்னைப் பற்றி மட்டுமே நினைத்ததில்லை என்று நான் கூற விரும்புகிறேன்.

சமூக சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சித் துறைகளில் அவர்கள் செய்த பணிகள் அனைவருக்கும் பயனளித்துள்ளன. நமது சொந்த சமூகத்தை வலுப்படுத்தும் அதே வேளையில், மற்ற சமூகங்களின் நலனுக்காகவும் நாங்கள் பங்களித்துள்ளோம்.

நமது தனிப்பட்ட அடையாளங்களைப் பொருட்படுத்தாமல், நாம் அனைவரும் இந்துக்கள். நமது பிரதமர் 'ஏக் ஹைன் டு சேஃப் ஹைன்' என்ற முழக்கத்தையும் வழங்கியுள்ளார். இதன் அர்த்தம் என்ன? நாம் அனைவரும் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள். ஒன்றாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். இந்த ஒற்றுமை உணர்வை வரும் தலைமுறையினருக்கு நாம் கடத்த வேண்டும்" என்றார்.