தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்து வருகிறது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.  இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக திமுக - அதிமுக என்று மோதல் இருந்து வந்த நிலையில், இந்த இரு கட்சியினருக்கும் போட்டியாக நடிகர் விஜய் களத்தில் குதித்துள்ளார். 

திமுக-தான் எதிரி:

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக உலா வரும் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது தமிழக வெற்றிக்கழகம் தேர்தலுக்காக கடுமையாக பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் தங்களுடைய போட்டி திமுக மட்டுமே என்று விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

திமுக மீது குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல், கொள்ளையடித்த பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்த உள்ளனர் என்று  விஜய் அடுத்தடுத்து சரமாரியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், இன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார். 

ஏமாற்ற வரும் விஜய்:

புதியதாக சிலர் நாங்கள்தான் மாற்று என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள் என்றும், அவர்களுக்கு நாம் பதிலடி தர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மு.க.ஸ்டாலின் புதியதாக சிலர் என்று நடிகர் விஜய்யையே மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால் விஜய்க்கு தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இது வரும் சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. 

முதல் தலைமுறை வாக்காளர்கள்:

குறிப்பாக, முதல் தலைமுறை வாக்காளர்கள் பலரும் விஜய்யின் தீவிர ரசிகர்கள் என்பதால் அவர்கள் வாக்கு தேர்தலில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும் என்று கருதப்படுகிறது. இதனால், மற்ற கட்சியினர் இது குறித்து அச்சப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க ஒவ்வொரு கட்சியினரும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மறைமுக தாக்குதல்:

மேலும், அதிகளவு பெண்கள் மற்றும் குடும்பங்களின் ஆதரவு கொண்ட நடிகர் விஜய். அவருக்கு பெண்களின் வாக்குகள் அதிகளவு கிடைக்கும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். இதனால், இந்த வாக்குகளையும் தங்கள் பக்கம் கவர்ந்திழுக்க அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளனர். 

இந்த சூழலிலே, மாற்றம் என்று இளைஞர்களை ஏமாற்ற புதியதாக சிலர் வந்துள்ளனர் என்று விஜய்யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.