தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்திவிடுவார்கள் என்று மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். - பா.ஜ.க குறித்து முதல்வர் பேச்சு.
 
ஏழாவது பொதுக்குழு
 
மதுரை உத்தங்குடி பகுதியில் தி.மு.க., பொதுக்குழு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான மு.க.ஸ்டாலின் மேடையில் பேசுகையில்..,” வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மண்ணில் - தொன்மையான தமிழரின் பண்பாட்டை எடுத்துக்காட்டும் மதுரை மண்ணில், தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு தேவையான முடிவுகளை எடுக்கவும் - தமிழ்நாட்டைச் சூழ்ந்து நிற்கும் பகையை எதிர்கொண்டு முறியடிக்க வியூகங்கள் அமைக்கவும் - வெற்றியை நோக்கி உழைக்கவும், இந்தப் பொதுக்குழுவை கூட்டியிருக்கிறோம். போர் முழக்கம் கேட்டதுமே, வெற்றியைப் பறிக்கும் வேகத்துடன் களம் புகும் வேங்கைகள் போன்று, இங்கு கூடியிருக்கும் உங்களை பார்க்கும்போது, புது எனர்ஜி வருகிறது. கழகத்துக்காக பலர் உழைத்த தியாக பூமியான மதுரை  மண்ணில், கழகப் பொதுக்குழு நடப்பதை பெருமையாக கருதுகிறேன். கழகம் தொடங்கியதில் இருந்து, மதுரையில் ஆறு பொதுக்குழு நடைபெற்றிருக்கிறது. இது ஏழாவது பொதுக்குழு. ஏழாவது முறை கழகம் ஆட்சியமைக்க அடிகோலும் பொதுக்குழுதான் இது. இங்கு கூடியிருக்கும் உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது. இது வழக்கமான பொதுக்குழு அல்ல... ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும் பொதுக்குழு. அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் என்ன மாதிரி தலைப்புச் செய்தி வந்திருக்க வேண்டும் என்றால், “ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது. கழகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது!”. “இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது!”. இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும். அதுக்கான வியூகத்தை வகுக்கும் பொதுக்குழுதான் இது.
 
நம்பர் ஒன் மாநிலம்
 
பொருளாதாரரீதியான முட்டுக்கட்டைகள், அரசியல்ரீதியான முட்டுக்கட்டைகள், ஆளுநர் வழியாக முட்டுக்கட்டைகள், உரிமைகளை அபகரிக்கும் முட்டுக்கட்டைகள் என்று எத்தனை எத்தனையோ தடைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு போட்டாலும், அதை எல்லாம் கடந்து, இன்று இந்தியாவிலேயே வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்!
 
பணிவான வேண்டுகோள்
 
ஆனால், இத்தனை லட்சம் பேரில், 30 அமைச்சர்கள் - 150 சட்டமன்ற உறுப்பினர்கள் - 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் - 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் - 76 மாவட்டச் செயலாளர்கள் - 21 மாநகர செயலாளர்கள் - 160 நகர செயலாளர்கள் - 490 பேரூர் செயலாளர்கள் - 936 ஒன்றிய செயலாளர்கள் - 236 பகுதி செயலாளர்கள் – 1,505 பகுதி வார்டு செயலாளர்கள் – 3,876 நகர வார்டு செயலாளர்கள் – 7,629 பேரூர் வார்டு செயலாளர்கள் - 12 ஆயிரத்தி 525 ஊராட்சி செயலாளர்கள் - 79 ஆயிரத்தி 962 கிளைச் செயலாளர்கள் - 68 ஆயிரத்தி 467 பூத் பொறுப்பாளர்கள் - பல ஆயிரம் சார்பு அணி நிர்வாகிகள் என்று இத்தனை பேருக்கு திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்புகளை வழங்கியிருக்கிறது. உங்களை வாழ வைத்த கழகத்தை நீங்கள் வாழ வையுங்கள். இந்த இயக்கத்துக்கு உண்மையாக இருங்கள். இதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள். நம்முடைய வெற்றிக் கூட்டணி வலுவாக தொடர்கிறது என்றால் அதுக்குக் காரணம், நம்முடைய கூட்டணி தோழர்களை நாம் மதித்து செயல்படுவதுதான். நம்முடைய கூட்டணித் தலைவர்களிடம் நான் எப்படி நட்போடும் பாச உணர்வோடும் பழகுகிறேனோ, நீங்களும் அதே உணர்வோடு கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும். சில இடங்களில் முரண்கள் இருந்தாலும், பேசி - விட்டுக்கொடுத்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் நம்முடைய வெற்றிப் பயணத்தை தொடர முடியும்.
 
பா.ஜ.க.விடம் சரணடைந்துவிட்டார்
 
எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பழனிசாமி என்ன நினைத்தார்? நம்முடைய கூட்டணி பிரிய வேண்டும் என்று நினைத்தார். அதுக்காக, என்னென்ன கதைகளையோ உருவாக்கினார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுடன் பிரிந்த மாதிரி நடித்தால், நம்முடைய கூட்டணி உடையும் என்று நினைத்தார்கள்! ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. அதனால்தான், இப்போது டெல்லிக்குச் சென்று, பல கார்களில் மாறிமாறி, அமித்ஷாவை சந்தித்து, மீண்டும் பா.ஜ.க.விடம் சரணடைந்துவிட்டார். அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது ஒரு வார்த்தைகூட பேசாமல், பவ்யமாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். என்ன ஒரு அடக்கம்? சசிகலா இவரை முதலமைச்சராக அறிவித்தபோது, எப்படி எல்லாம் ஆக்சன் செய்தாரோ அதே மாதிரி நடிப்பு! என்ன... காலில் மட்டும்தான் விழவில்லை! அது தனியாக செய்தார்களா என்று நமக்கு தெரியவில்லை. நாம் கேட்பது... ஒரு மாநிலத்தில், ஒரு கூட்டணிக்கு யார் தலைமை வகிக்கிறார்களோ, அவர்கள்தான் கூட்டணியை அறிவிப்பார்கள்! ஆனால், இங்கு அமித்ஷா அறிவிக்கிறார். இதிலிருந்தே இவர்கள் லட்சணத்தை நாம் புரிந்து கொள்ளலாம்! ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது அ.தி.மு.க! அடுத்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் பழனிசாமி துடிக்கிறார். அதனால்தான் அமித்ஷா இங்கு அடிக்கடி வருகிறார்! நான் ஏற்கனவே சொன்னதுதான், மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன், எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே ‘out of control’-தான். இதை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.
 
பா.ஜ.க., என்ன செய்யும்
 
பா.ஜ.க. கூட்டணி ஆட்சி வந்தால், தமிழ்நாட்டை என்ன செய்வார்கள் என்று சொல்ல வேண்டும். மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக்கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்கவிட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள். தொழில் வளர்ச்சி இருக்காது! இந்தி மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு செய்து, தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்திவிடுவார்கள் என்று மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, புதிதாக சிலர் “நாங்கள்தான் மாற்று” என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள். அவர்களுக்கும் பதிலடி தர வேண்டும். பா.ஜ.க.விடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றும் கட்சி கட்டமைப்பும், கொள்கை பிடிப்பும், வலிமையான தலைமையும், நம்மிடம் மட்டும்தான் இருக்கிறது என்று தமிழ்நாட்டில் இருக்கும் சின்ன குழந்தைக்குக்கூட தெரிந்திருக்கிறது.