வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் எல்லாவற்றையும் கடந்து துறவியாவது என்பது கடினமான ஒன்று. அதில், வெகுசிலர்தான் சமூகத்தில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றனர். ராமானுஜர் போன்ற துறவிகள் மக்களிடையே சகோதரத்துவத்தை போதித்து இந்து மதத்தில் மிக பெரிய புரட்சியை உண்டாக்கினர்.


"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என வள்ளலார் கூறுகிறார். ஆனால், தற்போதுள்ள துறவிகள் எல்லாம் அதிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றனர். சமத்துவத்தை போதித்த சமயம் பவுத்தம். அந்த மதத்தின் துறவிகள் செய்துள்ள சம்பவம் தற்போது பெரும் விவாத பொருளை கிளப்பியுள்ளது.


மத்திய தாய்லாந்தில் உள்ள புத்த விகாரத்தில் தற்போது துறவுகளே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அவர்களிடம் போதை பொருள் சோதனை நடத்தியபோது, அதில் அனைவரும் ஃபெயிலாகிவிட்டனர். இதையடுத்து, அனைவரின் துறவி பட்டமும் பறிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட அலுவலர் பூன்லர்ட் திண்டப்தை கூறுகையில், "பெட்சாபுன் மாகாணத்தின் பங் சாம் பான் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் ஒரு மடாதிபதி உட்பட நான்கு துறவிகளுக்கு நேற்று போதைபொருள் சோதனை நடத்தப்பட்டது. அதில், அவர்கள் மெத்தம்பேட்டமைன் எடுத்து கொண்டது தெரிய வந்தது.


 






போதைப்பொருள் மறுவாழ்வுக்கு உட்படுத்துவதற்காக புத்த பிக்குகள் சுகாதார மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கோயில் இப்போது துறவிகள் இல்லாமல் காலியாக உள்ளது. அருகிலுள்ள கிராமவாசிகள் தங்களால் எந்த புண்ணியமும் செய்ய முடியாது என்று கவலையில் உள்ளார்கள். 


துறவிகளுக்கு உணவை தானமாக வழங்குவதை வழிபாட்டாளர்கள் புண்ணியமாக கருதுகின்றனர். கிராம மக்கள் தங்கள் மதக் கடமைகளை நிறைவேற்ற அனுமதிக்கும் வகையில் அதிகமான துறவிகள் கோயிலுக்கு அனுப்பப்படுவார்கள்" என்றார்.


மியான்மரின் ஷான் மாநிலத்தில் இருந்து லாவோஸ் வழியாக மெத்தம்பேட்டமைன் என்ற போதை பொருள் தாய்லாந்துக்கு அதிகம் கடத்தபடுகிறது என ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.


தாய்லாந்தின் தெருக்களில் போதை பொருள் மாத்திரைகள் 20 பாட் (சுமார் $0.50)க்கும் குறைவாக விற்கப்படுகின்றன. தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள அதிகாரிகள் சமீபத்திய ஆண்டுகளில் அதிகளவில் போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.