உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது நொய்டா. நொய்டாவில் உள்ள செக்டார் 50 பகுதியில் அமைந்துள்ளது ஸ்பெக்ட்ரம் மால். இந்த வணிக வளாகத்தில் உணவகம் ஒன்று அமைந்துள்ளது. வணிக வளாகத்திற்கு வருபவர்களில் சிலர் இந்த உணவகத்திற்கு வந்து சாப்பிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்றும் ஒரு குடும்பத்தினர் அந்த உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளனர் அப்போது, அவர்கள் சாப்பிடுவதற்கு உணவு ஆர்டர் செய்துள்ளனர். அப்போது, அவர்களுக்கு உணவு பரிமாறிய உணவக ஊழியர் குறிப்பிட்ட உணவுகளை மட்டும் அந்த குடும்பத்தினருக்கு அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
மோசமான சர்வீஸ்:
இதையடுத்து, சாப்பிட்டு முடிந்த பிறகு சாப்பிட்டதற்கான ரசீதை உணவகத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த ரசீதை வாங்கிய அந்த குடும்பத்தினர் ரசீதில் இருந்த செர்வீஸ் சார்ஜ் தொகையை மட்டும் நீக்குமாறு கூறியுள்ளனர். மேலும், தங்களுக்கு சிறப்பான முறையில் சர்வீஸ் செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், உணவக ஊழியர்கள் அதை ஏற்க மறுத்துள்ளனர். அப்போது, அந்த குடும்பத்தினருக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின்போது இரு தரப்பினரும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதால் இரு தரப்பினரும் ஆத்திரம் அடைந்தனர்.
அடிதடி:
இதையடுத்து, ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அந்த குடும்பத்தில் இருந்த ஆண்களுக்கும், உணவக ஊழியர்களுக்கும் இடையே வணிக வளாகத்தின் வெளியே அடிதடி ஏற்பட்டது. இதனால், அந்த வணிக வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வணிக வளாக பாதுகாப்பு ஊழியர்களும், வணிக வளாக பொறுப்பாளர்களும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறியிருப்பதாவது, உணவக ஊழியர்கள் தங்கள் வீட்டு பெண்கள் பற்றி அவதூறாக பேசியதுடன், அவர்களை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். இணையத்தில் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வணிக வளாகத்தின் சார்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ரோடு போடுறியா? கருப்பு பெயிண்ட் அடிக்கிறியா? - சீர்காழியில் கடுப்பான பொதுமக்கள்! என்ன நடந்தது?
மேலும் படிக்க: Crime: மகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தந்தை... ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த போக்சோ நீதிமன்றம்!