காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று தனது 53ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அன்பு சகோதரர் என குறிப்பிட்டு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் ஜனநாயக பண்பைக் காப்பாற்ற நமக்கு நீண்ட பயணம் உள்ளது. ஒன்றாக அணிவகுத்து செல்வோம்" என குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் வரலாறு:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் சோனியா காந்திக்கும் 1970ஆம் ஆண்டு, ஜூன் 19ஆம் தேதி பிறந்தார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர், இந்திய இளைஞர் காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இதற்கு முன்பு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில், உத்தரப் பிரதேச அமேதி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்துள்ளார். பின்னர், 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், அமேதியில் இருந்து தோற்கடிக்கபட்டாலும் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.
உள்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராகவும், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்துள்ளார். வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிலும் இருந்துள்ளார். ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் அறங்காவலராகவும் உள்ளார்.
பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக எதிர்த்து வரும் ராகுல் காந்தி, மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தண்டனை பெற்று தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை பறி கொடுத்த காங்கிரஸ் கட்சியை மீட்டெடுப்பதில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணி அமைப்பதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம், பிரிட்டன் சென்ற ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகம் குறித்து பேசியிருந்தார். "ஜனநாயகம், நாடாளுமன்றம், பத்திரிகை சுதந்திரம், நீதித்துறை ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதான தாக்குதலை எதிர்கொள்கிறோம்" என ராகுல் காந்தி பேசியது, இந்திய நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியது. வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்கு எதிராக பேசியதாக கூறி, இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக நாடாளுமன்றத்தை முடக்கியது.