ஜூன் 10-ம் தேதி லூதியானாவில் நடந்த 8 கோடியே 49 லட்சம் ரூபாய் கொள்ளை வழக்கில், 'டக்கு ஹசீனா' எனப்படும் மந்தீப் கவுர், பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். வெறும் 10 ரூபாய் குளிர்பாணத்தால் சிக்கிய சுவாரசியம். ஜூன் 10 ஆம் தேதி மந்தீப் கவுர் என்பவர் CMS என்ற நிதி நிறுவனத்தில் இருண்டு சுமார் 8 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அதனை தொடர்ந்து காவல் துறையினர் இந்த கொள்ளை சம்பவத்தில் அரங்கேற்றியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் உள்ள ஹேம்குந்த் சாஹிப்பில், மன்தீப் கவுர் மற்றும் அவரது கணவர் ஜஸ்விந்தர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொள்ளை சம்பவத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக அவர்கள் சீக்கியர்களின் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டனர். தம்பதியைத் தவிர, மற்றொரு குற்றவாளியான கௌரவ் என்பவரையும் பஞ்சாபின் கிடர்பாஹாவைச் சேர்ந்த போலீசார் பிடித்தனர். இதுவரை இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த தம்பதியனரிடம் இருந்து ரூ.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
10 ரூபாய் குளிர்பானத்தால் கையும் களவுமாக சிக்கிய தம்பதியினர்:
மந்தீப் கவுரும், அவரது கணவர் ஜஸ்விந்தர் சிங்கும் நேபாளத்துக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக பஞ்சாப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அதற்கு முன், அவர்கள் ஹரித்வார், கேதார்நாத் மற்றும் ஹேம்குண்ட் சாஹிப் உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இருப்பினும், உத்தரகாண்டில் உள்ள சீக்கியர் கோவிலுக்கு வருகை தந்த ஏராளமான பக்தர்கள் மத்தியில் அவர்கள் இருவரையும் அடையாளம் காண்பது கடினமாக இருந்தது. எனவே, பக்தர்களுக்கு இலவச குளிர்பானம் வழங்க போலீசார் திட்டமிட்டனர். அப்போது குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் குளிர்பானத்தை பெறுவதற்கு வரிசையில் நின்றனர். பிடிபடாமல் இருப்பதற்காக அவர்கள் முகத்தை மூடியிருந்தனர். குளிர்பானத்தை வாங்கிய பின் அதை அருந்துவதற்காக முகத்தை திறந்த போது, போலீசார் அடையாளம் கண்டனர். இருந்தும் உடனடியாக கைது செய்யாமல் அவர்கள் தரிசனம் செய்த பிறகு கைது செய்தனர். let’s catch the queen bee என்ற தேடுதல் வேட்டை திட்டம் லூதியானா காவல் ஆணையர் தலைமையில் தொடங்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. லூதியானா போலீஸ் கமிஷனர் மன்தீப் சிங் சித்து கூறுகையில், மந்தீப் கவுரின் இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ.12 லட்சமும், அவரது கணவர் ஜஸ்விந்தர் சிங்கின் பர்னாலா வீட்டில் இருந்து ரூ.9 லட்சமும் மீட்கப்பட்டதாக தெரிவித்தார்.
யார் இந்த மந்தீப் கவுர்?
8.49 கோடி லூதியானாவில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் டக்கு ஹசீனா என்று அழைக்கப்படும் மந்தீப் கவுர், ஜூன் 10 அன்று நியூ ராஜ்குரு நகர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் சிஎம்எஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஐந்து ஊழியர்களை சிறைபிடித்து கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. இதுவரை நடந்த விசாரணையில் அவர் பணக்காரராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் பல வங்கிகளில் கடன் வாங்கியுள்ளதாகவும், இதற்கு முன் ஒரு காப்பீட்டு முகவராகவும், ஒரு வழக்கறிஞரின் உதவியாளராகவும் பணியாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கும் ஜஸ்விந்தர் சிங்குக்கும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.