கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று மாண்டியா பகுதியில் ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த காங்கிரஸ் கட்சி நபர் ஒருவர் அவர் மீது கை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் ஆத்திரம் அடைந்த அவர் அந்த நபரை கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி  வருகிறது. 


இதை பலரும் பார்த்து அவரின் செயல்பாட்டை கண்டித்து வருகின்றனர். இந்தச் சூழலில் அந்த நபர் சரியாக கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாததால் தான் அவரை அறைந்ததாக டிகே சிவக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வீடியோ எடுத்த நபரை அதை அழிக்குமாறு டிகே சிவக்குமார் கேட்டு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 






இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கர்நாடக பாஜக அமைச்சர் சிடி ரவி, "கர்நாடகா காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவக்குமார் தன்னுடைய கட்சி நபர் ஒருவரை பொதுவெளியில் அறைந்துள்ளார். கொட்வால் ராம்சந்திராவின் முன்னாள் சிஷியர் இப்படி தான் ஒரு கட்சி நபரை நடத்துவார் என்றால் மற்றவர்களை அவர் எப்படி நடத்துவார்?  வன்முறை செயல்களில் ஈடுபட சிவக்குமாருக்கு ராகுல் காந்தி முழு சுதந்திரம் அளித்துவிட்டாரா என்ன?" என வினவியுள்ளார். 




இது போன்று சிவக்குமார் சிக்கலில் சிக்குவது இது முதல் முறையல்ல. 2017ஆம் ஆண்டு ஒரு கட்சிக் கூட்டத்தின் போது ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முற்பட்டார். அந்த சமயத்தில் அவரை சிவக்குமார் அறைந்தார். அந்த சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அந்தப் பதிவையும் பாஜகவினர் எடுத்து பதிவிட்டு இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் காங்கிரஸ் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக அரசியலில் மிகவும் முக்கியமான தலைவர் ஒருவர் இப்படி செய்துள்ளது அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கட்சி எந்தவித நடவடிக்கையை எடுக்க போகிறது என்று பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


மேலும் படிக்க:  வரதட்சணை தடை சட்டத்தை சரியாக அமல்படுத்துங்கள்: கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!