நாட்டில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. சட்டசபை தேர்தல் நிறைவு பெற்ற பிறகு, இந்த 5 மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து தினசரி உயர்நது கொண்டே செல்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.


கடந்த மாதம் முதன்முறையாக வட மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 100ஐ கடந்து விற்கப்பட்டது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 100க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டிலே அதிகபட்சமாக மும்பையில் லிட்டர் ரூபாய் 105க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் லிட்டர் ரூபாய் 101க்கு பெட்ரோல் விற்பனையாகிறது.





இந்த நிலையில், பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 101.01க்கு விற்கப்படுகிறது. டீசல் 92.97 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் காரணமாக, மேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அந்த மாநில ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது.


கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காள அமைச்சர் பெச்சாராம் மன்னா பெட்ரோல் விலையை கண்டித்து சிங்கூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து சைக்கிள் மூலமாக 40 கிலோ மீட்டர் பயணித்து கொல்கத்தாவில் உள்ள மாநில சட்டசபைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதன்படி, மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள டம்டம், மத்திய அவென்யூ, செட்லா ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. பர்கனாஸ், ஹூக்ளியில் உள்ள சின்சுரா, மால்டா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டது. மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிர்கத் ஹகீம் கூறும்போது, கொரோனாவால் கடுமையாக மக்கள் பாதிக்கப்ப்டடுள்ள சூழலில், மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீது அதிகளவு வரிகளை விதித்துள்ளது.




பெட்ரோ தயாரிப்பு பொருட்களின் விலை கட்டுப்பாடில்லாமல் உள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு விலையை உயர்த்த அனுமதி அளித்துள்ளதால் அவர்களின் லாபங்களும் உயர்ந்து கொண்டு வருகிறது. இதனால் அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்க வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றார்.


மேலும், மேற்கு வங்க மாநில அரசும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை குறைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக, அந்த மாநில பா,ஜ.க. தலைவர் திலீப்கோஷ் கூறும்போது, பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் சர்வதேச சந்தையுடன் தொடர்புடையது என்றார்.