தென்மேற்கு டெல்லியின் கன்டோன்மென்ட் பகுதியில் துப்பாக்கி முனையில் 35 வயது நபர் ஒருவரின் எஸ்யூவியை மூன்று நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர். சனிக்கிழமை அதிகாலை 5.19 மணியளவில், டெல்லி கான்ட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜரேரா கிராமத்திற்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-8ல் இருந்து கார் கடத்தல் தொடர்பான தகவல் கிடைத்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் வசிக்கும் ராகுல் என்பவர், அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, தனது வெள்ளை டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்றதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
டில்லி கான்ட் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 397 (கொள்ளை அல்லது கொள்ளையடித்தல், மரணம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்தும் முயற்சி) மற்றும் பிரிவு 34 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார்.
வைரலாகும் வீடியோவில், மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் வந்த இடத்திற்கு அருகே டிரைவர் தனது வெள்ளை ஃபார்ச்சூனர் காரை நிறுத்துகிறார்.
SUV உரிமையாளர் ராகுல் வாகனத்தை விட்டு வெளியே வரும்போது, சிவப்பு மேலாடை அணிந்த ஒரு நபர் தனது பாக்கெட்டிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்து அவரை மிரட்டுகிறார். மேலும் இரண்டு துப்பாக்கி ஏந்திய குற்றவாளிகளும் வந்தனர். அவரை மிரட்டிவிட்டுக் காரில் ஏறும் நபர்கள் மூவரும் காருடன் அங்கிருந்து தப்பினர்.
இதுகுறித்து மேலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.