உத்தரகாசியில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் மீட்பு குழுவினர் வாக்கி டாக்கி மூலம் தொடர்புக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 






உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி அந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை முழுமையாக மூடிக் கொண்டது. அப்போது, சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 40 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர்.  சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்கள் பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, உத்தரகாண்ட்,  இமாச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து 10வது நாளாக நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் சுரங்கம் தோண்டும் கருவிகள் கொண்டு வரப்பட்டது. மேலும் 6 இன்ச் பைப் மூலம்  அங்கு சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உணவுகள் மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.


அந்த பகுதியில் துளையிட்டு தொழிலாளர்களை வெளியே கொண்டு வர தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை, இந்தோ-தீபெத் எல்லை காவல் படை, அதிவிரைவு படை என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச சுரங்கப்பாதை அண்டர்கிரவுண்ட் ஸ்பேஸ் பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் சில்க்யாரா சுரங்கப்பாதை பகுதிக்கு வந்தார். Micro tunnelling  பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






இந்நிலையில் முதல் முறையாக சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களின் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை அல்லது பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் கேமிரா மூலம் இந்த வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவில், உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களுடன் மீட்பு குழுவினர் வாக்கி டாக்கி மூலம் தொடர்புக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 10 வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவால் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.


Telangana Election: “காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு” .. தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் திமுக முடிவு..!


பாஜக கூட்டணி முறிவு; கட்சியை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும்: இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!