பாஜக உடனான கூட்டணி முறிவுக்கு பிறகு கட்சியை வலுப்படுத்த அதிமுக திட்டமிட்டுள்ள நிலையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 


2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளை பலப்படுத்துவது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபடுவது மட்டுமில்லாமல் களப்பணியிலும் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் கூட்டணி யாருடன் வைப்பது, கூட்டணியை முறித்துக்கொள்வது, கூட்டணிக்கட்சிகளுக்கு எவ்வளவு சீட் ஒதுக்கலாம், கேட்கலாம் என்பன உள்ளிட்ட செயல்பாடுகளிலும் இறங்கிவிட்டன. 


இந்த சூழ்நிலையில்தான் அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக கடந்த சில மாநிலங்களுக்கு முன் அறிவித்தது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த சில கருத்துகள் அதிமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தும் தன்னுடைய  கருத்தில் இருந்து அண்ணாமலை பின்வாங்கவில்லை.


இதன் காரணமாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இருந்தது. ஆனால் தற்போது தாங்கள் தான் எதிர்கட்சி என பாஜக சொல்லி வந்தது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள் கூட்டணி முறிவுக்கு காரணமாக அமைந்தது. கூட்டணி முறிவு விஷயத்தில்அதிமுக சற்று உறுதியாக இருப்பது போன்று அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் இதுநாள் வரையிலும் பேட்டியளித்துள்ளார். 


மறுபக்கம் திமுகவுடன் தான் கூட்டணி என விசிக உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளன. சீட் கேட்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் அதிமுக இன்று மாலை 4 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது, கிளை அமைப்புகளை பலப்படுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிகிறது. 


பூத் கமிட்டிகள் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளர்களாக 82 பேர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில மாவட்டங்களில் பூத் கமிட்டிகள் சரியாக அமைக்கப்படாமல் இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் மாவட்ட பொறுப்பாளர்களை அழைத்து இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கண்டிப்பார் எனவும் கூறப்படுகிறது.