கர்நாடக மாநிலம் காலபுரகி மாவட்டம் அப்சல்பூர் தாலுகாவில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி, கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் மூன்று நாள்களுக்கு முன்பு அவர் தவறி விழுந்துள்ளார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.


கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை:


கடந்த நவம்பர் 16 ஆம் தேதி, பள்ளியில் உள்ள மதிய உணவு சமையலறையில் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த ஏழு வயது சிறுமியின் பெயர் மஹாந்தம்மா சிவப்பா தலாவர். 


இதையும் படிக்க: Bigg Boss 7 Tamil: அந்த 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் இவங்களா? நிக்சனுக்கு காத்திருக்கும் ஆப்பு - பிக்பாஸ் வைத்துள்ள ட்விஸ்ட் என்ன? 


இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி ஊழியர்கள் இருவரும் மதிய உணவுத் திட்டத்தின் தலைமைச் சமையல்காரரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். குழந்தைக்கு 40 சதவீத தீக்காயம் ஏற்பட்டது.  சௌதாப்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.


சமையல்காரர் உள்பட மூன்று பேர் இடைநீக்கம்:


உயர் சிகிச்சைக்காக மாவட்டத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.


பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 304 ஏ பிரிவின் கீழ் அலட்சியத்தில் மரணம் நிகழ்ந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்ல" என்றார்.


கடந்த 2021ஆம் ஆண்டு, கடலூர் மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. வீட்டில் தாயார் ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்தபோது, சமையலறையில் வைக்கப்பட்டிருந்த சாம்பார் பாத்திரத்தில் அவரின் குழந்தை தவறி விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.  இதேபோல, சேலத்தில் சுடுநீரில் குழந்தை ஒன்று தவறி விழுந்து பரிதாபமாக இறந்தது.                                                                                


இதையும் படிக்க: Premalatha Vijayakanth : ’மருத்துவமனையில் விஜயகாந்த்’ செயல் தலைவராகும் பிரேமலதா, இளைஞரணிக்கு விஜயபிரபாகரன்...?