வட இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே பனி மூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக, டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் சாலைகளில் எதிரே செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டமாக உள்ளது. இதன்காரணமாக விமானங்கள், ரயில்கள் பல பகுதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பனிமூட்டத்தால் விபத்து:
உத்தரபிரதேசத்தில் பனி மூட்டம் காரணமாக சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆக்ராவில் இருந்து இறைச்சிக்காக கோழிகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. பின்னால் வந்த லாரி பனிமூட்டம் காரணமாக முன்னே சென்ற கோழிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் மீது மோதியது.
இதில், நிலைதடுமாறிய வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில், அந்த வேன் நிலை தடுமாறி சாலையின் ஓரத்திற்கு சென்றது. இந்த விபத்தை ஏற்படுத்திய கனரக லாரியையும், விபத்தில் சிக்கிய மினி வேனும் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இரண்டு வாகனங்களின் முன்பகுதியும் மிக கடுமையாக சேதமடைந்து இருந்தது.
கோழிகளை திருடிச் சென்ற வாகன ஓட்டிகள்:
அப்போது, அந்த வழியே வாகனத்தில் சென்ற வாகன ஓட்டிகள் சிலர் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, மினிவேனில் இருந்த கோழிகளை தூக்கிச் செல்கின்றனர். தங்களால் எத்தனை கோழிகளை எடுத்துச் செல்ல முடியுமோ அத்தனை கோழிகளை எடுத்துச் சென்றனர். எதிர் திசையில் சென்ற சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, இந்த சாலைக்கு வந்து கோழிகளை எடுத்துச் சென்று தங்களது வாகனங்களை எடுத்துக் கொண்டு திரும்பிச் சென்றனர்.
விபத்தில் சிக்கிய வாகனம் என்றும் பாராமல் வாகனத்தில் இருந்த கோழிகளை மக்கள் திருடிச் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வாகனங்களை போலவே அந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் பனிமூட்டம் காரணமாக விபத்தில் சிக்கி கடுமையாக சேதமடைந்து இருந்தது. இதனால், சாலைகளிலே ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த விபத்து காரணமாக அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நீண்ட நேரமாக பாதிக்கப்பட்டு இருந்தது.
மேலும் படிக்க: Rahul Gandhi : மணிப்பூர் முதல் மும்பை வரை; 6200 கிலோ மீட்டர் யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி