காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டார். இது சுதந்திர இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த அரசியல் தலைவரும் மேற்கொள்ளாத அரசியல் யாத்திரையாகும். இந்த யாத்திரையினால் காங்கிரஸ் கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் ஆட்சி அமைத்துள்ளதால், கர்நாடகாவில் காங்கிர மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்கும், தெலுங்கானாவில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை அடைவதற்கும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைதான் முக்கிய காரணம் என கட்சி வட்டாரத்திற்குள் பேசப்பட்டது.


இந்நிலையில், ராகுல் காந்தி வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி மணிப்பூரில் இருந்து மும்பை வரை அதாவது 6 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் யாத்திரை மேற்கொள்ளவுள்ளார் என காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.  இந்த யாத்திரைக்கு பாரத் நியாய் யாத்ரா என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது பாரத் நீதி யாத்திரை. இந்த யாத்திரை எதிர்வரும் மக்களவைப் பொதுத்தேர்தலில் வடகிழக்கு மாநில்ங்கள் தொடங்கி மத்திய இந்தியாவில் உள்ள மாநிலங்கள் வரை காங்கிரஸை வலுப்படுத்தும் என கூறப்படுகின்றது. 






மணிப்பூரில் உள்ள இம்பாலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கொடியசைத்து தொடங்கி வைக்கும் 'பாரத் நியாய யாத்திரை'யில் ராகுல் காந்தி 14 மாநிலங்கள் மற்றும் 85 மாவட்டங்களில் யாத்திரை மேற்கொள்ளவுள்ளார்.


அதாவது, மணிப்பூர், நாகாலாந்து, அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அவர் பாரத் ஜோடோ யாத்திரையில் எப்படி நடக்கவும் செய்தது மட்டும் இல்லாமல் வாகனத்திலும் பயணம் செய்து மக்களைச் சந்தித்தாரோ அதேபோல் பாரத் நியாய் யாத்திரையிலும் மக்களைச் சந்திப்பார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 




இந்த பாரத் நியாய் யாத்திரை நாட்டு மக்களுக்கு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நீதி ஆகியவற்றை பாதுகாப்பதை முன்னிலைப்படுத்தி இருக்கும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை தொடக்கப் புள்ளியாகத் தேர்ந்தெடுத்த காங்கிரஸ், இதற்கு காரணம் முக்கிய காரணமே வன்முறையால் பாதிப்புக்குள்ளான மணிப்பூர் மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகத்தான் பாரத் நியாய் யாத்திரை மணிப்பூரில் தொடங்கப்படவுள்ளது.


ராகுல் காந்தி கடந்த ஆண்டு அதாவது 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் இருந்து தனது பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார். ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஐந்து மாத பாத யாத்திரை ஜனவரி மாதம் ஸ்ரீநகரில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.