இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மல்யுத்த பெண்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இந்தநிலையில், பிரிஜ் பூஷனின் ஆதரவாளரான சஞ்சய் சிங் பப்லு, கூட்டமைப்பில் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். 






அதேநேரத்தில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தின் முன் வைத்துவிட்டு சென்றார். தொடர்ந்து, வினேஷ் போகட் தான் பெற்ற அர்ஜூனன் விருது, தயான் சந்த் கேல் விருதை திரும்ப அளித்தார். இந்த சூழலில் மல்யுத்த வீரர்களை சந்திக்க ஹரியானாவில் உள்ள மல்யுத்த வீரர் தீபக் புனியாவின் கிராமத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றுள்ளார். 


ராகுல் காந்தி மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு: 


 ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள சாரா கிராமம் தீபக் புனியாவின் கிராமமாகும். தீபக் மற்றும் பஜ்ரங் புனியா என இருவரும் இந்த வீரேந்திர அகாராவில் இருந்து தங்கள் மல்யுத்த பயணத்தை தொடங்கினர். 


ராகுல் காந்தி சாரா கிராமத்தை அடைந்து வீரேந்திர அகாரா அகாடமியில் உள்ள மல்யுத்த வீரர்களை சந்தித்தார்.  அப்போது, ராகுல் காந்தியுடன் பஜ்ரங் புனியாவும் உடனிந்தார். மல்யுத்த வீரர்கள் அரங்கை அடைந்த ராகுல், அவர்கள் பயிற்சியில் தானும் ஈடுபட்டார். மேலும், அவர்களது மல்யுத்த வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். 






அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பஜ்ரங் புனியா கூறியதாவது, “மல்யுத்த வீரர்களின் தினசரி வாழ்க்கை, அவர்களது உணவுமுறை எப்படி இருக்கிறது என்பதை பார்க்க ராகுல் காந்தி இங்கு வந்துள்ளார். இதன்போது, உடற்பயிற்சியும் செய்தார். 


எங்களிடமிருந்து சில நகர்வுகள், மல்யுத்தத்தில் புள்ளிகள் எவ்வாறு பெறப்படுகின்றன என்பதை கற்றுக்கொண்டார். ராகுல் காலையின் தினை ரொட்டி மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிட்டார். என்னுடன்தான் மல்யுத்தம் செய்தார்” என்றார்.