Tirumala Tirupati: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கடந்த 11 மாதங்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.1,274 கோடி கிடைத்துள்ளது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி கோயில்:
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையான தரிசிக்க வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் திருப்பதி மலைக்கு வாகனங்கள் மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாகவும் சென்று பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
11 மாதங்களில் ரூ.1,274 கோடி வருவாய்:
ஏழுமலையான தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் தங்களின் சக்திக்கு ஏற்ப காணிக்கை செலுத்தி வருகின்றனர். 1950ஆம் ஆண்டு ஏழுமலையானுக்கு கிடைத்த உண்டியல் வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாகவே இருந்தது. ஆனால், 1958ஆம் ஆண்டு முதன்முறையாக ஒரு லட்சத்தை தாண்டியது. 1990ஆம் ஆண்டு முதல் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான உண்டியல் வருமானம் வரத் தொடங்கியது. அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பால் கடந்த 2020-21ஆம் ஆண்டில் வருமானம் குறைந்தது. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, மீண்டும் கட்டுக்கடங்காத கூட்டம் திருப்பதிக்கு வரத் தொடங்கி உள்ளது.
அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 11 மாதங்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.1,274 கோடி கிடைத்துள்ளதாக என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உண்டியல் காணிக்கை தற்போது எண்ணி கணக்கிடப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக கடந்த ஜனவரியில் ரூ.123 கோடியும், குறைந்தபட்சமாக அக்டோபர், நவம்பர் மாதத்தில் ரூ.108 கோடியும் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இலக்கை எட்டுமா?
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, டிசம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் 10 நாட்களுககு ஏழுமலையான் கோயிவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும். இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இதனால், இந்த மாதம் ரூ.110 கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதானல், 2023ஆம் ஆண்டில் ரூ.1,500 கோடி உண்டியல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானம் ரூ.1,320 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க