மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.


வங்கக்கடலில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி உருவான மிக்ஜாம் புயல் அதிதீவிர புயலாக டிசம்பர் 4 ஆம் தேதி மாறி, 5 ஆம் தேதி ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை கிட்டதட்ட 24 மணி நேரம் தொடர்ச்சியாக சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் சென்னையின் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. 


இப்படியான நிலையில் மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டது. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து வட்டங்களில் வசிப்பவர்களுக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படவுள்ளது. 


அதேசமயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களிலும் வசிப்பவர்களுக்கு நிவாரணத்தொகை கிடைக்கும். காஞ்சிபுரத்தில் குன்றத்தூர் வட்டத்தில் இருப்பவர்களுக்கு முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள மேவலூர்குப்பம், சிவன்தாங்கல், கட்சிப்பட்டு கிராமங்களில் வசிப்போருக்கு நிவாரண தொகை கிடைக்கப்போகிறது. 


திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களில் வசிப்போருக்கு மட்டும் நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சென்னையில் வசிக்கும் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரேஷன் அட்டை இல்லாதவர்கள், நியாய விலைக் கடைகளில் உரிய படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. 


இதனிடையே நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன்களும் விநியோகப்பட்டது. இந்த நிவாரணத் தொகையை வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார். சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி நகர் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு முதலமைச்சர் நிவாரணத்தொகை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பிற பகுதிகளிலும் நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.