பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே. அத்வானிக்கு, இன்று நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரரான அத்வானி, நாட்டின் உள்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.
அத்வானி கடந்து வந்த பாதை:
இந்திய அரசியலின் திசைவழி போக்கை மாற்றி அமைத்த ரத யாத்திரையை முன்னின்று நடத்தியவர். கடந்த 1990ஆம் ஆண்டு, செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கப்பட்ட ரத யாத்திரையால் நாட்டின் பல பகுதிகளில் மதக் கலவரம் வெடித்தது. கலவரத்தின் உச்சமாக, 1992ஆம் ஆண்டு, டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
நாட்டின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள அத்வானியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் அரசியலில் அவர் கடந்து வந்த பாதை பற்றியும் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
நவம்பர் 8, 1927ஆம் ஆண்டு: கராச்சியில் (தற்போதைய பாகிஸ்தான்) கிஷன்சந்த் மற்றும் ஞானிதேவி அத்வானிக்கு மகனாக பிறந்தவர் எல்.கே. அத்வானி.
1936 -1942: கராச்சியில் உள்ள செயின்ட் பேட்ரிக் பள்ளியில் படித்தார். பள்ளி காலத்தில் சிறப்பாக படித்த அத்வானி தொடர்ந்து முதலிடம் பிடித்தார்.
1942ஆம் ஆண்டு: ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்தார்.
1942ஆம் ஆண்டு: வெள்ளையனே வெளியேறு இயக்கம் உச்சம் தொட்ட காலத்தில் ஹைதராபாத்தில் உள்ள தயாராம் கிடுமல் தேசிய கல்லூரியில் சேர்ந்தார்.
1944ஆம் ஆண்டு: கராச்சியில் உள்ள மாடல் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
1947: பிரிவினையின் போது சிந்துவில் இருந்து வெளியேறி டெல்லிக்கு வந்தார்.
1947-1951: கராச்சி கிளையின் ஆர்.எஸ்.எஸ் செயலாளராக ஆல்வார், பரத்பூர், கோட்டா, பூண்டி மற்றும் ஜலவர் ஆகிய இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பணியை ஏற்பாடு செய்தார்.
1957: அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு உதவி செய்வதற்காக டெல்லிக்கு சென்றார்.
1958-63: டெல்லி மாநில ஜனசங்கத்தின் செயலாளராக பதவி வகித்தார்.
1960-1967: ஜனசங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழான ஆர்கனைசரில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார்.
பிப்ரவரி மாதம், 1965ஆம் ஆண்டு: கமலா அத்வானியை மணந்தார். இவர்களுக்கு, பிரதிபா மற்றும் ஜெயந்த் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஏப்ரல் மாதம், 1970ஆம் ஆண்டு: மாநிலங்களவை தேர்வு செய்யப்பட்டார்.
டிசம்பர் மாதம், 1972ஆம் ஆண்டு: பாரதிய ஜனசங்கத்தின் (BJS) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜூன் மாதம், 1975ஆம் ஆண்டு: எமர்ஜென்சியின் போது பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். பாரதிய ஜனசங்கத்தின் பிற நிர்வாகிகளுடன்
பெங்களூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மார்ச் மாதம் 1977 முதல் ஜூலை மாதம் 1979 வரை: மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக பதவி வகித்தார்.
1980-86: வாஜ்பாய் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்த பாஜகவை தொடங்கினார். கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்தார்.
மே மாதம், 1986ஆம் ஆண்டு: பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
மார்ச் மாதம், 1988: பாஜக தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1990ஆம் ஆண்டு: ராமர் கோயிலை கட்டக் கோரி சோம்நாத்திலிருந்து அயோத்திக்கு ரத யாத்திரை நடத்தினார்.
அக்டோபர் மாதம், 1999 முதல் 2004 வரை: நாட்டின் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
ஜூன் மாதம், 2002 முதல் 2004 வரை: நாட்டின் துணைப் பிரதமராக பதவி வகித்தார்.