IND - AFG Speech: இந்தியாவால் அங்கீகரிக்கப்படாத தாலிபன் அரசு, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

ஆஃப்கானிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை: 

பிராந்திய அரசியலில் ஒரு மைல்கல்லான நடவடிக்கையாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்றும் வரும் தாலிபன் அரசின் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகி உடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தாலிபன் அரசுடன் இந்தியா தரப்பில் நடைபெறும் முதல் அமைச்சர்மட்டத்திலான பேச்சுவார்த்தை இதுவாகும். பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு, தாலிபன் அரசாங்கம் கண்டனம் தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த தொலைபேசி உரையாடல் அரங்கேறியுள்ளது. அமெரிக்க ராணுவம் வெளியேறியதை தொடர்ந்து ஆஃப்கானிஸ்தானில் அமைந்த தாலிபன்கள் ஆட்சியை, இந்தியா தற்போது வரை மக்களாட்சியாக அங்கீகரிக்காதது குறிப்பிடத்தக்கது.

தாலிபன்கள் உடன் பேச்சுவார்த்தை:

தொலைபேசி உரையாரல் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “ ஆஃப்கானிஸ்தான் வெலியுறவு அமைச்சர் முத்தாகி உடன் நல்ல் உரையாடல் நடைபெற்றது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்த அவர்களது முடிவை நான் மனமார பாராட்டுகிறேன். இந்த பேச்சுவார்த்தையின்போது, “இந்தியாவுடனான ஆஃப்கான் மக்களின் நீண்டகால உறவை குறிப்பிட்டதோடு, வளர்ச்சிக்கான தேவைக்கு இந்தியாவின் ஆதரவு தேவை” என அவர் குறிப்பிட்டார். இணைந்து செயல்படுவதை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்” என ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement

வணிகத்தை மேம்படுத்த திட்டம்:

தொலைபேசி உரையாடலின் போது இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவது, இந்திய சிறைகளில் உள்ள ஆஃப்கான் கைதிகளை விடுவிப்பது மற்றும் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகள் தாலிபன் அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் நாடுகள் எல்லையை கூட பகிர்ந்து வருகிறது. ஆனால், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீரில் அந்த எல்லை சிக்கியுள்ளது. எனவே இருநாடுகளுக்கு இடையேயான வணிகத்தை மேம்படுத்துவதற்கு, ஈரானில் உள்ள சபஹர் துறைமுகம் மட்டுமே ஒரு வழியாக கருதப்படுகிறது.

நட்பை பலப்படுத்த திட்டம்:

கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிச்தானில் தாலிபன் அரசு அமைந்தது முதலே, இருநாட்டு உறவை வலுப்படுத்தும் விவகாரத்தில் இந்தியா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இணைந்து பணியாற்றுவது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இருதரப்பு உறவும் தற்போது சுமூக நிலையை எட்டாவிட்டாலும், ஆஃப்கான் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை செய்வதில் இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பஹல்காம் தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியபோது, இந்திய தூதரக அதிகாரில் பிரகாஷ் ஆனந்த் முத்தாகியை இஸ்லாமாபாத்தில் நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கை:

அண்மைக்காலமாக தாலிபன்களின் நம்பிக்கையை வளர்க்கும் விதமாக, நாட்டின் டெல்லி, மும்பை, மற்றும் ஐதராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள அவர்களது தூதரகங்களில் நிர்வாக பணிகளை மேம்படுத்த இந்திய அரசு அனுமதித்துள்ளது. கல்வி, வணிகம் மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்தியா வரும், ஆஃப்கான் மக்களுக்கு தேவையான உதவிகள் இந்த தூதரகங்கள் மூலம் செய்யப்படுகின்றன.  மனிதாபிமான உதவியைப் பொறுத்தவரை, டிசம்பர் 2024 வரை கடந்த சில ஆண்டுகளில் 50,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான கோதுமை, 300 டன் மருந்துகள், 27 டன் பூகம்ப நிவாரண உதவி, 40,000 லிட்டர் பூச்சிக்கொல்லிகள், 100 மில்லியன் போலியோ டோஸ்கள், 1.5 மில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசி, போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்திற்கான 11,000 யூனிட் சுகாதார கருவிகள், 500 யூனிட் குளிர்கால ஆடைகள் மற்றும் 1.2 டன் எழுதுபொருள் கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல கப்பல்களை இந்தியா ஆஃப்கானிஸ்தானிற்கு அனுப்பியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீனா உடனான இந்தியாவின் உறவு தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், மற்றொரு அண்டை நாடான ஆஃப்கானிஸ்தான் உடன் இந்தியா நெருக்கும் காட்ட தொட்ங்கியுள்ளது.இது புவிசார் அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக கருதப்படுகிறது.